சமோசாவுக்காக நடந்த சண்டை! மதுரையில் உணவக உரிமையாளர் கொலை!

 

-MMH

 மதுரை, கே.புதூர் அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி முன்பாக முத்துக்குமார் என்பவர் உணவகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி கண்ணன் என்பவர் உணவகத்திற்கு உணவருந்த வந்துள்ளார். இட்லிக்கு மட்டும் ஆர்டர் கொடுத்த கண்ணன், உணவு உண்ட பின், பில்லில், இட்லிக்கான தொகையோடு சமோசாவிற்கான தொகையும் சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்டார்.

இதையடுத்து உணவக உரிமையாளர் முத்துக்குமாரிடம், 'தான் சமோசா சாப்பிடவில்லை, இட்லி மட்டும்தான் சாப்பிட்டேன்' என்றும், 'அதற்கான தொகையை மட்டும்தான் தருவேன்' எனவும் கண்ணன் கூறியுள்ளார். ஆனால், கண்ணன் சமோசாவும் சாப்பிட்டதாக முத்துக்குமார் கூற, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இது கைகலப்பாக மாற, ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஆத்திரமடைந்த கண்ணன், விறகு வெட்ட வைத்திருந்த அரிவாளால் உணவக உரிமையாளர் முத்துக்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக தெரிகிறது. மேலும், அவரின் கையை துண்டாக வெட்டி எடுத்து தொழிற்பயிற்சி கல்லூரி முன்பாக வீசிவிட்டு கண்ணன் தப்பியோடியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கண்ணனை தனிப்படை அமைத்து கைது செய்தனர். கொலை நடந்தபோது, வாடிக்கையாளர் கண்ணனும், உணவக உரிமையாளர் முத்துக்குமாரும் மதுபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஒரு சமோசாவிற்கு நடந்த சண்டை, கொலையில் முடிந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

-மதுரை வெண்புலி.

Comments