காரைக்குடி தம்பதியிடம் கொள்ளையடித்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் உட்பட 8 பேர் கைது..!

   -MMH 

   வயதான தம்பதிகளைக் கட்டிப் போட்டு, 45 பவுன் தங்க நகைகளும், 34 காரட் வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் உட்பட 8 நபர்கள் கைது செய்யப்பட்டு, 40 பவுன் நகைகள் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள குற்றவாளிகளைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது கண்டனூர். இங்குள்ள பங்களா தெருவிலுள்ள தனது பூர்வீக வீட்டில் மனைவி விசாலாட்சியுடன்(62) வசித்து வருபவர் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான தட்சிணாமூர்த்தி(69). இத்தம்பதியின் மகள் மற்றும் மகன்கள் ஆகியோருக்கு திருமணமாகி வெளியூரில் செட்டிலாகிவிட்ட நிலையில், இருவரும் இங்கு தனிமையில் வசித்து வந்துள்ளனர். 

கடந்த 02/07/2021 அன்று திருமண நிகழ்வு ஒன்றிற்காக சென்னையிலிருந்து கண்டனூருக்கு வந்திருந்த இளைய மகன் அழகப்பன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்ப செல்கையில், தன்னுடைய மனைவியின் 30 காரட் வைர நகைகள், 17 பவுன் தங்க நகைகளை லாக்கரில் வைக்க தந்தை தட்சிணாமூர்த்தியிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், 03/07/2021 இரவு 7 மணிக்கு மேல் தட்சிணாமூர்த்தியின் வீட்டிற்குள் புகுந்த முகமூடிக்கும்பல் ஒன்று, தம்பதிகளை தாக்கி கட்டிப் போட்டு ஒட்டு மொத்தமாக அங்கிருந்த தங்கம், வைரம், வெள்ளி மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது. இதுகுறித்து, "லாக்கரில் வைக்கப்படவிருந்த மருமகளின் நகைகளுடன், மனைவியின் 4 காரட் வைர நகைகள், 28 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி, ₹.1.75 லட்சம் ரொக்கம் ஆகியன முகமூடிக் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது" என சாக்கோட்டை காவல் நிலையத்தில் தட்சிணாமூர்த்தி நேரில் புகாரளித்தார். 

 
இதுகுறித்து சாக்கோட்டை காவல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். மேலும் காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜி மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், கண்டனூா் அருகே மாத்தூா் விலக்கு சாலையில் போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டபோது அவ்வழியே வந்த வந்த அசோக்குமாா்(19), அவரது நண்பா் மகேஷ் (20) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனா்.


விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் ஒரு பகுதியில் கண்டனூரைச் சோ்ந்த ராமு (48), பாக்கியலெட்சுமி (40), அவா்களது மகன் அசோக்குமாா் (19) ஆகியோா் வாடகைக்கு குடியிருந்துள்ளனா். பாக்கியலெட்சுமிக்கும், அவரது தோழியான ஆராவயலைச் சோ்ந்த மஞ்சுளா (40) என்பவருக்கும் கடன் தொல்லை இருந்ததால், தம்பதி வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு அசோக்குமாரிடம் கூறியுள்ளனா்.

இக்கொள்ளைச் சம்பவத்தை நிறைவேற்ற அசோக்குமாா், திருமயம் மகேஷ், அண்டக்குடி பந்தலராஜன், அஜய் மற்றும் சிலருடன் சோ்ந்து ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ராமு, பாக்கியலெட்சுமி, மஞ்சுளா, அசோக்குமாா், மகேஷ், சாக்கோட்டை அம்சகுமாா், ஆறாவயல் ஐங்கரன், வெங்களூா் பிரபுராஜ் ஆகிய 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனா்.

வா்களிடமிருந்து 45 பவுன் நகைகள், 35 காரட் வைர நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதானவர்களில் மஞ்சுளா என்ற பெண், இதே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளையும் மஞ்சுளாவின் வீட்டில் புதைத்து, பணத்தை மட்டும் செலவு செய்திருக்கின்றனர். நாளடைவில் சந்தேகம் எழாத நிலையில் நகையை விற்க முயற்சி செய்தபோது சிக்கியுள்ளனர். முதற்கட்டமாக 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டு எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு தொடா்பாக தலைமறைவாக உள்ள பந்தல ராஜன், அஜய் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனா்.

- பாரூக், சிவகங்கை.

Comments

Anonymous said…
Arumai