வால்வோ ஷோரூம் கோவையில் திறப்பு 3 புதிய கார்களும் அறிமுகம் !

 

-MMH

   வால்வோ கார் இந்தியா நிறுவனம் தனது புதிய ‘வால்வோ தமிழ்நாடு’ என்னும் ஷோரூமை கோவை அவினாசி சாலையில் திறந்துள்ளது. தமிழகத்தில் திறக்கப்படும் 2வது ஷோரூம் இதுவாகும்.  இதன் விற்பனை பிரிவு 7 ஆயிரம் சதுர அடியிலும், கார்களுக்கான பராமரிப்பு சேவை மையம் 13 ஆயிரம் சதுர அடியிலும் திறக்கப்பட்டுள்ளது. இங்கு இந்நிறுவனத்தின் எஸ்90, எக்ஸ்சி60 மற்றும் எக்ஸ்சி90 ஆகிய 3 மாடல்களில் மிதமான – கலப்பின பெட்ரோல் கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த புதிய ஷோரூமை வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜோதி மல்ஹோத்ரா திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், தமிழ்நாடு எங்களுக்கு மிகவும் முக்கியமான சந்தையாகும், மேலும் கோயம்புத்தூர் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். தற்போது நாங்கள் கோவையில் திறந்துள்ள இந்த ஷோரூம் தமிழகத்தில் வளர்ந்து வரும் ஆடம்பர கார்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று தெரிவித்தார்.

இது குறித்து பேசிய வால்வோ தமிழ்நாடு ஷோரூம் இயக்குனர் விஷ்ணு கூறுகையில்,  தமிழ்நாட்டிலுள்ள எங்களின் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பான கார்களை வழங்குவதற்காக வால்வோ கார் இந்தியாவுடன் நாங்கள் இணைந்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மிக உயர்ந்த தரமான கார்கள் என்று உலக அளவில் அறியப்படும் வால்வோ நிறுவனத்துடன் இணைந்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதே எங்களின் முக்கிய நோக்கமாகும் என்று பேசினார்.

- சீனி,போத்தனூர்.

Comments