இதயம் கல்லாகி மனிதம் மரத்துப் போன சம்பவம்! பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற கொடூரம்! !
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி சக்தி விநாயகர் லே அவுட் பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில் குழந்தையின் அழுகுகுரல் கேட்டது. இதை பக்கத்தில் உள்ள ஒரு வீட்டை சேர்ந்த பெண் கேட்டு, அக்கம்பக்கத்தினருடன் சத்தம் வந்த இடத்துக்கு சென்றார். அப்போது அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த இடத்தில் ஒரு பை கிடந்தது. மேலும் அந்த பை அங்குமிங்கும் அசைந்தது.
உடனே பையை திறந்து பார்த்தபோது, உள்ளே பிறந்து சில மணி நேரமே ஆன அழகான பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆம்புலன்சில் ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் குழந்தையை கொடுத்தனர். குழந்தையின் உடலில் இருந்த தூசி, மண் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி கழுவினர். பின்னர் குழந்தையை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.
அங்கு குழந்தைகள் நல டாக்டர் கார்த்திகை மணிகண்டன், அந்த குழந்தையை பரிசோதனை செய்தார். இதையடுத்து பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை 2 கிலோ 400 கிராம் எடை இருந்தது. மேலும் குப்பையில் கிடந்ததால் கிருமி தொற்று அல்லது வேறு ஏதாவது உடல் நல பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சூளேஸ்வரன்பட்டியில் குழந்தை கிடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் குழந்தையை வீசிய நபர்களை கண்டுபிடிக்க போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குழந்தையை முதலில் பார்த்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தையை பையில் கொண்டு வந்த பெண் ஒருவர், குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் போட்டுவிட்டு சென்றார் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறிய அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்தான் பையில் குழந்தையை வைத்து குப்பையில் வீசி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணை பிடித்து நடத்திய விசாரணையில், அவரது 21 வயது மகள் ஒரு வாலிபரை காதலித்து வந்ததும், பின்னர் நெருங்கி பழகியதால் கர்ப்பமாகிவிட்டதும் தெரியவந்தது.
மேலும் அவரது வயிறு சிறியதாக இருந்ததால் கர்ப்பமானது வெளியே தெரியவில்லை. நேற்று திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டு அவருக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்து உள்ளது. இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதி பையில் குழந்தையை வைத்து குப்பையில் வீசி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. தாயும், சேயும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அந்த பெண்ணை கர்ப்பிணியாக்கிய நபர் யார்? என்பது குறித்தும், வீட்டில் பிரசவம் பார்த்த நபர் குறித்தும் தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையை கல்நெஞ்சம் கொண்ட தாய் குப்பையில் வீச கூறிய சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-S.ராஜேந்திரன், M. சுரேஷ் குமார், ஹரிகிருஷ்ணன்.
Comments