திடீர் வெள்ளப் பெருக்கால் ஆழியாற்றில் சிக்கிய தம்பதி! துணிச்சலுடன் ஆற்றில் இறங்கி காப்பாற்றியவருக்கு பாராட்டு! !

 

  -MMH

  மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 119 அடியாக உள்ளது. 

இதற்கிடையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் அப்பர் ஆழியாறு அணையில் மின் உற்பத்திக்கு பின் அடிக்கடி தண்ணீரை திறந்து விடுவதாலும் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப் படுகிறது.

இந்த நிலையில்  திடீரென்று அணைக்கு வினாடிக்கு 2,265 கனஅடி நீர்வந்தது. இதை கண் காணித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அபாயஒலி எழுப்பினர். 

இதையடுத்து அணையில் இருந்து மதகுகள் வழியாக வினாடிக்கு 2,265 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப் பட்டது. இதன் காரணமாக ஆழியாற்றில் இருகரையையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்து சென்றது.  

மேலும் ஆழியாறு அணைக்கு எதிரே உள்ள தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளித்துக்கொண்டு இருந்தனர். வெள்ளம் சீறிப்பாய்ந்து வந்ததை பார்த்த அவர்கள் அலறியடித்தபடி கரையை நோக்கி ஓடினார்கள். 

அப்போது ஒரு தம்பதி வெள்ளத்தில் சிக்கினார்கள். அவர்களை வெள்ளம் அடித்துச்சென்றது. அப்போது அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பினார்கள். 

இதை பார்த்ததும் கரையில் இருந்தவர்கள் அலறினார்கள். அத்துடன் இது குறித்து ஆழியாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது அதே பகுதியை சேர்ந்த நாகேஷ் என்பவர் துணிச்சலாக ஆற்றில் குதித்து தம்பதி சிக்கிய பகுதிக்கு சென்றார். பின்னர் அவர்களை உயிருடன் மீட்டு கயிறு மூலம் பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தார். இதனால் அங்கு நின்றவர்கள் நிம்மதி அடைந்தனர். 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "இந்த தடுப்பணையில் குளிக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தடையை மீறி குளித்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சுற்றுலா பயணிகள் இங்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்" என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments