வால்பாறையில் மரம் முறிந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு! வாகன ஓட்டிகள் தவிப்பு!
வால்பாறையில் பெய்த மழை காரணமாக மரம் ஒன்று வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதன்காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறை பகுதியில் அவ்வப்போது இரவு மற்றும் பகல் நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் இரவு பகலாக கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலையோரங்களில் ஆங்காங்கே மண்ணின் பிடிப்பு தன்மை குறைந்தது. இதனால் சாலையோரத்தில் ஒரு சில இடங்களில் உள்ள சிறு மரங்கள் முறிந்து விழுந்தது. ஆனால் போக்குவரத்து பாதிப்புகள் பெரியளவில் ஏற்படவில்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் வால்பாறையில் காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் குரங்குமுடி எஸ்டேட் பகுதிக்கு செல்லும் சாலையில் மாணிக்கா எஸ்டேட் மாதா சந்திப்பு அருகில் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் வால்பாறை- குரங்குமுடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மர அறுவை எந்திரங்கள் மூலம் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-S.ராஜேந்திரன்.செந்தில்குமார்.
Comments