ஆட்கொல்லி புலியின் இருப்பிடத்தை அறிய முடியாமல் வனத்துறையினர் தவிப்பு! !

  -MMH

  நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி நேற்று 17-வது நாளாக நடைபெற்றது. 

மேலும் வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கேமராக்களை வன ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது 2 புலிகளின் உருவங்கள் பதிவாகி இருந்தது. அது தொடர்பாக ஆய்வு செய்த போது தேடப்படும் புலியின் உருவம் இல்லை என தெரிய வந்தது.

இந்த நிலையில் சிங்காரா, மாயார் உள்ளிட்ட வனப்பகுதியில் மாலை 6 மணி வரை வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனாலும் ஆட்கொல்லி புலி குறித்து எந்த தடயமும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது; "கூடலூர் அருகே தேவன் -1 பகுதியில் பதுங்கியிருந்த புலியை ஆய்வு செய்த போது வயது மூப்பு காரணமாக இரையை வேட்டையாட முடியாத நிலையில் இருப்பது தெரியவந்தது. புலி உடல்நிலை பாதிக்கப்பட்டு அதன் தலையில் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதை பிடிக்கும் பணி நடைபெற்ற நிலையில் மசினகுடிக்கு இடம் பெயர்ந்தது.

கடந்த 1 வாரமாக ஆட்கொல்லி புலி சாப்பிடவில்லை. 3 நாட்களுக்கு முன்பு மாயார் பகுதியில் ஒரு மாட்டை புலி அடித்துக் கொன்றது. இதனால் மாட்டின் உடல் அருகே கிடந்த புலியின் சில உரோமம் (முடிகள்) சேகரிக்கப்பட்டு தேடப்படும் புலியின் உரோமமா? என அறிவியல் ரீதியாக கண்டுபிடிக்க ஹைதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பரண்களும் அகற்றப்பட்டு விட்டது. மசினகுடி, சிங்காரா, மாயார் உள்பட அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சுமார் 90 கேமராக்களிலும் தேடப்படும் புலியின் உருவம் பதிவாகவில்லை. இதனால் உடல் நலன் மிகவும் பாதிக்கப் பட்டு அடர்ந்த புதருக்குள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் சில தினங்களில் ஆட்கொல்லி புலி குறித்து உறுதியான தகவல் கிடைத்து விடும்." இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர், 

-S.ராஜேந்திரன்.

Comments