உயிர்ப்பலி ஆகும் முன்பே முத்துசாமிபுதூர் தரை பாலத்தை உயர்த்துங்கள்! - கேரளா அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை.
தமிழக கேரள எல்லைப்பகுதியான பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரம் முத்துசாமிபுதூர் அருகே உள்ள பாரதப்புழா ஆற்றின் குறுக்கே மிக தாழ்வான தரைப்பாலம் உள்ளது.
இந்த தரைப்பாலம் வழியாக நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். மேலும் விவசாய நிலங்களுக்கு இடுபொருட்கள் கொண்டு செல்வதோடு அறுவடை செய்த காய்கறிகள், தானியங்கள் மற்றும் தேங்காய்கள் உள்ளிட்டவை இந்த வழித்தடத்தில் எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக இப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு பயன்பாடு உள்ள வழித்தடத்தில் தரைப்பாலம் தாழ்வாக இருப்பதால் மழைக்காலங்களில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் பொழுது தரைப் பாலத்தை மூழ்கிச் செல்வதால் தரைப் பாலத்தை பயன்படுத்த முடியாமல் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேசமயம் தண்ணீரில் அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரை மற்றும் செடி கொடிகள் உள்ளிட்டவை தரைப்பாலத்தில் மலைபோல் குவிந்து வழித்தடம் குறுகலாக உள்ளது ஒரு கனரக வாகனம் மட்டுமே செல்லும் அளவில்தான் அகலம் உள்ளது.இதனால் எதிரில் வரும் வாகனங்கள் விலகிச் செல்ல முடிவதில்லை இரவு நேரத்தில் இந்த வழித்தடத்தில் பயணிப்பவர்கள் கவனக்குறைவால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்றன.இதற்குத் தீர்வாக தரை பாலத்தை உயர்த்தி கட்டித்தர வேண்டும், பாலத்தில் மின் விளக்குகள் பொருத்தி இரவு நேர விபத்தை தடுக்க வழிவகை செய்து தரவேண்டும் என்கின்றனர் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள்.-M.சுரேஷ்குமார்.
Comments