இருசக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்! அதிகாரிகளை கண்டதும் தப்பியோடிய நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை! !
கோவை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகளால் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக் குளம் பகுதியில் இருந்து பட்டணம் செல்லும் ரோட்டில் கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அதிகாரி முத்து, வருவாய் ஆய்வாளர் மகேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒருவர் மொபட்டில் வேகமாக வந்தார். அவர், அங்கு நின்றிருந்த அதிகாரிகளை பார்த்ததும், மொபட்டை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார். இதை பார்த்த அதிகாரிகள் அங்கு ஓடி சென்றனர். ஆனால் அதற்குள் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் அதிகாரிகள் அந்த மொபட்டில் இருந்த பொருட்களை ஆய்வு செய்தபோது அது ரேஷன் அரிசி என்பதும், ரேஷன் அரிசியை கடத்தி வந்தபோது அதிகாரிகளை பார்த்ததும் அந்த நபர் தப்பி ஓடியதும் தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அங்கு இருந்த 250 கிலோ ரேஷன் அரிசி, மொபட், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அத்துடன் தப்பி ஓடிய நபர் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-S.ராஜேந்திரன்.
Comments