முள்ளம்பன்றியை சாப்பிட்டுவிட்டு முடியாமல் தவித்த புலிக்குட்டிக்கு தீவிர சிகிச்சை! தலைமை வன உயிரின காப்பாளர் ஆய்வு!!

 

  -MMH

   வால்பாறை அருகே உள்ள பஜாரில் கடந்த மாதம் 27-ந் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் புலிக்குட்டி ஒன்று சுற்றித்திரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் மானாம்பள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை கள இயக்குனர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் வனத்துறையினர் வலை விரித்து புலிக்குட்டியை பிடித்தனர்.

 பிடிக்கப்பட்ட 8 மாதமான ஆண் புலிக்குட்டியை அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் உள்ள மனித-வனவிலங்குகள் மோதல் தடுப்பு மையத்திற்கு கொண்டு சென்று, தொடர்ந்து 14 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில், பிடிப்பட்ட புலியை பார்க்க பொதுமக்களும் அங்கு வந்தனர். இதனால் அவர்களை கண்டு புலிக்குட்டி மிரண்டு உறும தொடங்கியது. 

இந்த நிலையில் புலிக்குட்டிக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று வனத்துறையின் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில், புலிக்குட்டியை மானாம்பள்ளி எஸ்டேட் பகுதியில் உள்ள வனத்துறையின் தங்கும் விடுதிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அங்கு கால்நடை டாக்டர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் புலிக்குட்டியின் தற்போதைய உடல் நிலை குறித்து வனத்துறையின் தலைமை வன உயிரின காப்பாளர் சேகர்குமார் மீரஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அவர் புலிக்குட்டிக்கு சிகிச்சையளித்து வரும் வனத்துறையின் கால்நடை டாக்டர் மற்றும் உள்ளூர் கால்நடை டாக்டர்களிடம் கடந்த 20 நாட்களாக புலிக்குட்டிக்கு அளித்த சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் புலிக்குட்டிக்கு தேவைப்படக்கூடிய நவீன சிகிச்சை குறித்தும் விவாதித்தார்.

இதனை தொடர்ந்து புலிக்குட்டியை பெரிய அளவிலான கூண்டிற்கு மாற்றலாமா அல்லது தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கூண்டுக்கு பதிலாக புலிக்குட்டி நன்றாக நடமாடுவதற்கு வசதியான மாற்றிடம் அமைக்கலாமா என்பது குறித்தும்,

 எப்போது புலிக்குட்டியை வனப்பகுதிக்குள் விடலாம் வனப்பகுதிக்குள் விட்டால் புலிக் குட்டியால் உயிர் வாழ முடியுமா அல்லது இன்னும் பல நாட்களுக்கு நமது கண்காணிப்பில் வைத்து பின்னர் வனப்பகுதிக்குள் விடுவதை குறித்து முடிவெடுக்கலாம் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை குறித்து தலைமை வன உயிரின காப்பாளர் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனையில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை கள இயக்குனர் கணேசன், வனத்துறையின் கால்நடை டாக்டர் கலைவாணன் மற்றும் டாக்டர் மெய்யரசன், இயற்கை வனவளபாதுகாப்பு ஆராய்ச்சியாளர் கணேஷ் ரகுராம், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments