நாங்களும் மனிதர்கள் தான்..!! முதல்வர் ஐயா எங்களையும் பாருங்கள்..!! பழங்குடியினரின் சோகம்..!!!

 

-MMH

திருப்பூர் - திண்டுக்கல் மாவட்டங்களை இணைக்கும் ஆண்டிப்பட்டி ஊராட்சிக்குள் இருக்கிறது மண் திட்டு கிராமம். பாலை நிலம் போன காணும் சிறிய மலைக்குன்று தான் இந்த கிராமம். இங்கு, 29 பழங்குடி குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு குடும்பத்தில் 4 முதல் அதிகபட்சமாக 12 பேர் வரை இருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கான எந்த அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள ஒரு சிலருக்கு மட்டும் அரசு சார்பில் கட்டத் தொடங்கிய பசுமை வீடுகளும் பாதியிலேயே நிற்கின்றன. இன்னும் சிலரோ, தங்களுக்காக கட்டம்போட்டுக் கொடுத்த இடத்தில் கம்புகளை ஊன்றி பழைய சாக்குப் பைகளை கூரையாக மூடி அதற்குள்ளே குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் இங்கிருப்பவர்கள் சொந்த நாட்டின் அகதிகள் கணக்காய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வனத்துக்குள் ஆடு மாடுகள் மேய்த்தும், சீமாறுக்கான மூலப்பொருட்களைச் சேகரித்தும் இவர்கள் ஏதோ தங்கள் வயிற்றைக் கழுவுகிறார்கள். போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், சிறுவர்களின் கால்களில் விஷச் செடிகள் கிழித்து கால்கள் புண்ணாகி சீழ்வடித்துக் கொண்டு அலைகிறார்கள். இவர்களுக்கு எவ்வித மருத்துவ உதவியும் செய்துகொடுக்க ஆளில்லை. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவர் கவனிப்பாரின்றி வீடுகளில் தனிமைப்பட்டுக் கிடக்கின்றது 

இதற்கு பதில் சொன்னார் அங்கு வசிக்கும் மாரியப்பன். “நாங்க ஆண்டாண்டு காலமா வனத்துக்குள்ள வசிச்சோம். அதை விட்டு வெளியே வந்தா, எங்க வாழ்க்கையில பாலாறும் தேனாறும் ஓடும்னெல்லாம் சொன்னாங்க. அதையும் நம்பி இந்த மண் திட்டுப் பாறைக்கு வந்து 40 வருசம் ஓடிருச்சு. எங்கள வெச்சு அரசியல்வாதிங்க தான் பிழைக்கிறாங்களே தவிர, எங்களுக்கு எதுவும் நடக்கல. வந்த நாளா நாங்க இப்படியே தான் இருக்கோம்” என்றார் மாரியப்பன்.

"1990-களுக்கு பின்னர் இப்பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் பெருமளவு ஸ்டெர்லிங் கார்ப்பரேட் கம்பெனிக்கு கை மாறியதால், இவங்க பாரம்பரியமாக வசித்த இடங்களும் செல்லும் வழித்தடங்களும் பறிக்கப்பட்டு இந்த மண் திட்டுக்கு கட்டாயமாக கடத்தப்பட்டுருக்காங்க. இந்த இடத்துல சிலருக்கு அரசு பட்டா நிலம் வழங்கி இருக்கு. சிலருக்கு வீடும் கட்டிக் குடுத்துருக்காங்க. அதில் 7 வீடுகளை மூணு வருசமா பாதியிலேயே போட்டு வெச்சிருக்காங்க. இவங்களுக்குன்னு பாதுகாக்கப்பட்ட கழிப்பறை வசதி ஏதும் கிடையாது. பேருக்குத்தான் அங்கன்வாடி மையம் இருக்கு. அது செயல்படுவதே இல்லை.

போகிற வழியில் போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் ஆய்வுக்குச் செல்லும் முதல்வர், பாவப்பட்ட இந்தப் பழங்குடி மக்களுக்கும் ஒரு பாதையைக் காட்டட்டும்!

 நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா,திருப்பூர்.

Comments