நூதன முறையில் மோசடி செய்யும் கொள்ளை கும்பல் கைது! கள்ளநோட்டுகள் பறிமுதல்! !
பழமையான கோவில் கோபுர கலசங்களில் அரிய வகை உலோகமான இரிடியம் இருப்பதாக கூறப்படுகிறது. 1 கிலோ இரிடியம், கள்ள சந்தையில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் விலை போகிறது. இந்த இரிடியம் வீட்டில் இருந்தால், சகல செல்வங்களும் பெருகும் என்ற நம்பிக்கையால், இதை வைத்து பல்வேறு மோசடிகள் அரங்கேறுகின்றன.
கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்கள் மகரூப், 58; அப்துல் கலாம், 44. இவர்களை தொடர்பு கொண்ட ஷாஜி என்பவர், தனக்கு தெரிந்தவரிடம் இரிடியம்கலசம் இருப்பதாக கூறி, அதில் முதலீடு செய்தால், பல கோடி ரூபாய் பணம் கிடைக்கும் எனத் தெரிவித்தார். இதையடுத்து, இருவரும் 27 லட்சம் ரூபாய் வரை கொடுத்தனர். ஆனால், இரிடியம் கலசத்தை தரவில்லை.
கோவை ஒத்தக்கால் மண்டபத்தைச் சேர்ந்த முருகேசனிடம் இரிடியம் கலசம் உள்ளதாகவும், அங்கு சென்று பெற்றுக் கொள்ளுமாறும் ஷாஜி தெரிவித்தார்.கோவை வந்த மகரூப், அப்துல் கலாம், முருகேசனை சந்தித்தனர். இரிடியம் கலசத்தை காண்பித்தபோது சந்தேகம் அடைந்த இருவரும் தகராறில் ஈடுபட்டனர். முருகேசன் இருவரையும் கத்தியால் குத்த முயன்றார். அவரிடம் இருந்து தப்பிய இருவரும், போலீசில் புகார் தெரிவித்தனர்.
முருகேசன் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.கோவை எஸ்.பி., செல்வநாகரத்தினம் கூறியதாவது:தலைமறைவாக உள்ள ஷாஜியை கைது செய்ய, இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கைதானவர்களிடம் இருந்து, 99.20 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கத்தி, போலி கவச உடை, இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கும்பலுக்கு பிற மாவட்டங்களில் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-S.ராஜேந்திரன்.
Comments