ஏடிஎம் மையங்களில் உதவுவது போல் திருட்டு! பர்தா அணிந்த பெண் கைவரிசை!
மதுரை உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைபட்டியைச் சேர்ந்தவர் லிங்கம்மாள் (65). இவர் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டிலுள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
இவர் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டிலுள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். நீண்ட நேரமாக வரிசையில் நின்ற அவரிடம், அவருக்கு பின்னாலிருந்த பர்தா அணிந்த பெண் ஒருவர், தான் பணம் எடுத்துதருவதாக கூறியுள்ளார்.
லிங்கம்மாளும் ஏடிஎம் கார்டைக் கொடுத்து பணம் எடுத்துத்தர கூறியுள்ளார். பின்னர் ஏடிஎம் இயந்திரத்தில் கார்டைச் சொருகிய பெண் பாட்டி உங்கள் அக்கௌண்டில் பணம் இல்லை எனக் கார்டை திருப்பிக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து லிங்கம்மாள் ஏமாற்றத்துடன் வெளியே வந்தார். இதனை கவனித்துக்கொண்டிருந்த அருகிலிருந்தவர், லிங்கம்மாளிடம் சென்று, அந்தப்பெண் கார்டை மாற்றிக்கொடுத்துவிட்டார், அதை சரிபாருங்கள் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து சுதாரித்த லிங்கம்மாள் கூச்சலிட்டுள்ளார். அப்போது தப்ப முயன்ற அந்தப்பெண்ணை பிடித்து, உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அப்பெண்ணிடம் சார்பு ஆய்வாளர் அருண் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அப்போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. அந்தப் பெண் தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்த கொண்டமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரது மனைவி மணிமேகலை (23) என்பது தெரியவந்தது. கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியே வசித்து வரும் மணிமேகலை, இளங்கலை கணினி அறிவியல் பட்டதாரி ஆவார்.
இவர் பல வங்கியின் போலி ஏடிஎம் கார்டை வைத்துக் கொண்டு, தன் அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக பர்தா அணிந்து கொண்டு, ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பவர்களின் வரிசையில் நின்று கொள்வார்.
பின்னர் அங்கு வரும் வயதானவர்களிடம் பணம் எடுக்க உதவுவது போல், அவர்களுடைய கார்டுக்குப் பதில் தன்னிடம் உள்ள போலி கார்டை கொடுத்து, உங்கள் கணக்கில் பணம் இல்லை எனக்கூறி அவர்களை அனுப்பிவிட்டு, ஒரிஜினல் கார்டை வைத்து பணம் எடுக்கும் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்பெண் இதேபோல் உசிலம்பட்டி, பேரையூர், வத்தலக்குண்டு போன்ற பல ஊர்களில் தனது கைவரிசையைக் காட்டியதும், ஏடிஎம் மையங்களில் பணம் திருடியது தொடர்பாக இவர் மீது உசிலம்பட்டி உள்பட பல காவல்நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
சம்பவத்தன்று இதேபோல் மூன்று பேரிடம் ₹.35 ஆயிரம் வரை பணம் திருடியது தெரிய வந்தது. இது குறித்து உசிலம்பட்டி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மணிமேகலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-ராயல் ஹமீது.
Comments