நான்காவது முறையும் நீட் பாஸ் ஆகலைன்னா என்ன பண்றது-மன உளைச்சலில் மாணவர் தற்கொலை..!!
கோவை: நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பொள்ளாச்சி அருகே மாணவர் விஷம் குடித்து, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே முத்தூரைச் சேர்ந்தவர் குப்புசாமி - விவசாயி. இவரது மனைவி வளர்மதி. இவர்களின் இரு மகன்கள் கீர்த்திவாசன் (21), தினேஷ் (17). கீர்த்திவாசன் 2018ஆம் ஆண்டே பிளஸ் 2 படிப்பை முடித்துவிட்டு மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக 4 முறை நீட் தேர்வை எழுதியுள்ளார். மூன்று முறை கீர்த்திவாசன் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
இந்நிலையில் 4-வது முறையாக தற்போது தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காகக் காத்திருந்துள்ளார். இம்முறை தேர்வில் கேள்விகள் கடினமாக இருந்ததால் தேர்ச்சி பெறமாட்டோமோ என்ற அச்சத்தில் இருந்து வந்துள்ளார் கீர்த்திவாசன்.
மேலும், ஏற்கெனவே எழுதிய 3 தேர்வுகளிலும் தனது விடைத்தாள் மாறிவிட்டதால்தான் தோல்வியடைந்துவிட்டேன் என்றும், தற்போதும் தோல்வியடைந்து விடுவேனோ என பயப்படுவதாகவும் நண்பர்களிடம் கீர்த்திவாசன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கீர்த்திவாசன் இன்று திடீரென விஷம் குடித்துள்ளார். வெளியே சென்றிருந்த தனது தாய் வளர்மதியின் செல்போனுக்குத் தொடர்புகொண்டு, தான் விஷம் குடித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கீர்த்திவாசன் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார். அவரை மீட்ட பெற்றோர் அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியிலேயே கீர்த்திவாசன் உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
Comments