பணம் வென்றது, பாசம் தோற்றது..!! போலி ஆவணம் மூலம் சொத்துக்களை அபகரிக்க முயன்ற மகன் மீது காவல் நிலையத்தில் தாய் புகார்!!
சிவானந்தபுரம் பகுதியில் போலி ஆவணம் மூலம் தாயாரின் சொத்துக்களை அபகரிக்க முயன்ற மகன். தாய் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார்.!
கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவரது மனைவி ராமாத்தாள் (வயது 91). இவர் 1952 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை சிவானந்தா மில்லில் வேலை செய்துள்ளார். வேலை செய்த பணத்தை சேர்த்து வைத்தது விளாங்குறிச்சி பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகன் மாணிக்கம் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வடமாநிலத்தில் வேலை செய்து அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து தங்கிவிட்டார்.
பல ஆண்டுகள் கழித்து தன்னுடைய தாயார் வீட்டுக்கு வந்த அவர் தனக்கு தற்போது வட மாநிலத்தில் வேலை இல்லை என்றும் ஆகவே இங்கே தான் இருக்கப் போவதாகவும் கூறியுள்ளார். அவர் தாயாரும் வாங்கிய ஒரு ஏக்கர் நிலத்தில் குடிசை அமைத்து மாடுகளை மேய்த்து பராமரித்துக் கொள்ள மாணிக்கத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சொத்தை அபகரிக்க நினைத்த மாணிக்கம் தன் தாயார் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது கைரேகையை ஒரு பத்திரத்தில் எடுக்க முயன்றபோது ராமாத்தாள் கூச்சலிட்டு உள்ளார். இதனால் பயந்து போன மாணிக்கம் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இச்சம்பவத்தை குறித்து ராமாத்தாள் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் மாணிக்கத்தை தேடி வருகின்றனர். பெற்ற தாயைவிட சொத்து தான் முக்கியம் என்று தன் மகன் செய்த காரியத்தை நினைத்து ராமாத்தாள் கண்ணீர் விட்டு அழுதது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முஹம்மது சாதிக் அலி.
Comments