கணவன்-மனைவி திடீர் சாலை மறியல்..!! போக்குவரத்து காவல் அதிகாரியின் அடாவடி கெடுபிடி..!!!பரபரப்பான காணொளி..!!
கோவை மாவட்டம் கணபதி சாலையில், தனியார் வங்கிக்கு சென்று வந்த கணவன் மனைவியிடம் போக்குவரத்து விதிமீறல் என்று கூறி அடாவடி செய்து மற்றும் இன்றி இழிவுபடுத்திப் பேசியதாகக் கூறி தம்பதியர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கணபதி பகுதியில் பரபரப்பு, வாகனப் போக்குவரத்து பாதிப்பு.
காந்திமா நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா - கலைவாணி தம்பதியர் இவர்கள் அதே பகுதியில் ஒரு கடையை நடத்தி வருவதாக தெரிகிறது. கடையின் வியாபார பணத்தை தினமும் இவர்கள் அக்கவுண்ட் வைத்துள்ள தனியார் வங்கியில் செலுத்துவது வழக்கம். அதேபோல் நேற்று மதியமும் தங்கள் பணத்தை டெபாசிட் செய்வதற்காக தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை வங்கியின் வெளியே நிறுத்திவிட்டு பணம் செலுத்த சென்றுள்ளனர்.
பணம் செலுத்திவிட்டு வங்கியின் வெளியே அவர்களின் இரு சக்கர வாகனத்தை எடுப்பதற்காக வந்தபொழுது அவர்கள் வந்த இருசக்கர வாகனம் இன்னும் சில இருசக்கர வாகனங்களுடன் சேர்த்து. கணபதி போக்குவரத்து காவல்துறையினால் சங்கிலியால் பூட்டப்பட்டு இருப்பதை கண்டுள்ளனர். உடனே அருகாமையில் இருந்த சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் அதிகாரியிடம் இதைப்பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அந்த அதிகாரி அவர்களின் இரு சக்கர வாகனம் பார்க்கிங் ஏரியாவுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கு தம்பதியினர் மறுத்து பேசவே அது வாக்குவாதமாக மாறி இருக்கிறது. வாக்குவாதத்தின் போது போக்குவரத்து காவல் அதிகாரி தங்களை இழிவாக பேசியதாகவும், அதிக அபராதத் தொகை கேட்டதாகவும் தம்பதியினரால் சொல்லப்படுகிறது. மேலும் இரண்டு மணி நேரம் காத்திருந்து தங்கள் இரு சக்கர வாகனத்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அந்த காவல் அதிகாரி கூறியதாக தெரிகிறது.
அதிக அபராதத் தொகையை கேட்டது மட்டுமல்லாமல் தங்களை இழிவாக பேசிய போக்குவரத்து காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய தம்பதியினர் திடீரென்று கணபதி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த இடமே மிகவும் பரபரப்பாகவும், பதட்டமாகவும் காணப்பட்டது. வாகனப் போக்குவரத்தும் ஸ்தம்பித்து கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. தன் மனைவியை ஒரு பெண் என்று கூட பார்க்காமல் இழிவாகப் பேசிய காவல் அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலைவாணியின் கணவன் ராஜா கோரிக்கை வைத்துள்ளார்.
காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகம் இதுபோன்ற சிலரின் செய்கையினால் வெறும் பலகையில் உள்ள எழுத்தாக மட்டுமே இருக்கும் என்று பொதுமக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றன .
நாளை வரலாறு செய்திக்காக,
-முஹம்மது சாதிக் அலி.
Comments