கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை! கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!!

 -MMH

கோவை கைத்தறி மற்றும் துணி நுால் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத, 1.83 லட்சம் ரூபாய் சிக்கியது.

தமிழகம் முழுதும் கைத்தறி மற்றும் துணி நுால் அலுவலகங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.கோவை, சாய்பாபாகாலனி, பாரதி பார்க் பகுதியில் செயல்படும் கைத்தறி மற்றும் துணி நுால் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கோவை லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., திவ்யா தலைமையில், 5 அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கினர்.

அப்போது, உதவி இயக்குனர் சூர்யா என்பவரிடம் கணக்கில் வராத, 1.03 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்ததை கைப்பற்றினர். அதேபோன்று கூட்டுறவு சங்க கிளர்க் லியோ என்பவரிடம் இருந்து, 80 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் சிக்கியது.இதுகுறித்து உதவி இயக்குனர் மற்றும் கிளர்க் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு துவங்கிய சோதனை நேற்று மதியம் வரை நீடித்தது. லஞ்ச ஒழிப்பு போலீ சாரிடம் கேட்டபோது, 'கோவையில் நடந்த சோதனையில் கணக்கில் வராத, 1.83 லட்சம் ரூபாய் ரொக்கம் சிக்கியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது' என்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments