சாலையின் நடுவே இருந்த மரத்திற்கு மறுவாழ்வு கொடுத்தவர்களுக்கு பாராட்டு! !
பொள்ளாச்சி பல்லடம் ரோடு சேதுபதி நகர் அருகில் உள்ள கிருஷ்ணா அவென்யூவில் ரோட்டின் நடுவில் போக்குவரத்திற்கு இடையூறாக 10 ஆண்டுகள் ஆன அரச மரம் இருந்தது. எனவே அந்த மரம் வெட்டக்கூடிய நிலையில் இருந்தது.
இந்த சூழ்நிலையில் அரச மரத்தை வெட்டி அகற்றாமல், வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து அந்த மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மரத்தை வேரோடு பிடுங்கினர்.
பின்னர் அந்த மரம் வாகனத்தில் ஏற்றி ஜோதி நகரில் உள்ள அமைதி நகர் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு அங்கு குழி தோண்டி அரச மரம் அங்கு நடப்பட்டது. அதுபோன்று வேர்ப்பகுதியில் கரையான் அரிக்காமல் இருக்க 10 கிலோ குருணை மருந்தும் போடப்பட்டது.
இதை தவிர செம்மண் கலந்த கலவையும் வேர் பகுதியில் கொட்டப்பட்டது. இதையடுத்து மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் நகராட்சி மூலம் இந்த மரத்திற்கு தேவையான தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-S.ராஜேந்திரன்.
Comments