குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி! தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்!!
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியாறு அருகே குரங்கு நீழ்வீழ்ச்சி அமைந்து உள்ளது. இந்த நீழ்வீழ்ச்சிக்கு வால்பாறை சக்தி எஸ்டேட் மற்றும் வனப்பகுதியில் உள்ள நீரோடைகள் மூலம் நீர்வரத்து உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது.
கடந்த 15-ந்தேதி கன மழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அப்புறப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் தடுப்பு கம்பிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
அதன்பிறகும் தொடர் மழையினால் நீர்வரத்து அதிகரித்ததால் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் 15 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டது. மிலாது நபியையொட்டி விடுமுறை விடப்பட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.
அவ்வப்போது மழை பெய்ததால் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் அத்துமீறி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் செல்வதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று ஆழியாறு அணை மற்றும் பூங்காவிற்கும் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-S.ராஜேந்திரன்.
Comments