மணப்பெண் இருந்ததோ கேரளாவில்! மாப்பிள்ளை இருந்ததோ உக்ரைனில்! திருமணம் நடந்ததோ ஆன்லைனில்!

 





-MMH

            கொரோனாவால் சொந்த ஊருக்கு வரமுடியாமல் உக்ரைன் நாட்டில் சிக்கிக்கொண்ட மணமகன், அங்கிருந்தபடியே கேரளாவில் இருந்த மணப்பெண்ணுடன் வீடியோ காலில் கனெக்ட் ஆகி, சார் பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்படி பதிவுத் திருமணம் செய்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.

கேரள மாநிலம், புனலூர் இலம்பல் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன்குமார். இவர் உக்ரைன் நாட்டில் வேலை செய்து வருகிறார். ஜீவன்குமாருக்கும் திருவனந்தபுரம் களக்கூட்டத்தைச் சேர்ந்த தன்யா மார்ட்டினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சிறப்புத் திருமணச் சட்டம் மூலம் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும் எனக் கடந்த மார்ச் மாதம் மனு அளித்தனர், இந்த ஜோடி. ஆனால், கொரோனா காரணமாக ஜீவன்குமாரால் சொந்த ஊருக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஜீவன்குமார் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், திருமணம் பதிவு செய்ய அளிக்கப்பட்ட மனுவின் காலாவதி தேதியை நீட்டிக்க வேண்டும் என்றும், சார் பதிவாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், மாறாக வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திருமணத்தை நடத்தித் தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாநில அரசு, வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் கருத்துகளைக் கேட்டறிந்தது. விசாரணை முடிவில் ஜீவன்குமார் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்தது.

இதைத் தொடர்ந்து புனலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜீவன்குமார்- தன்யா மார்ட்டின் ஆகியோரது பதிவுத் திருமணம் நடைபெற்றது. ஜீவன்குமாருக்குப் பதிலாக, அவரது தந்தை தேவராஜன் சார் பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்திட்டார். சார் பதிவாளர் பிரோஸ் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. கூகுள் மீட் மூலம் உக்ரைனில் உள்ள ஜீவன்குமாரைப் பார்த்தார் சார் பதிவாளர் பிரோஸ். அதுபோல மாவட்ட பதிவாளர் ஜான்சன், கூகுள் மீட் வழியாக மணமகனைப் பார்த்தார். சில நிமிடங்களிலேயே இந்தத் திருமண நிகழ்வு நடந்து முடிய, சார் பதிவாளர் திருமணத்திற்கான சான்றிதழை வழங்கினார்.

-ராயல் ஹமீது.

Comments