கோவையில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!!
கோவை:மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காணப்படுவதால், கோவையில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இம்மாதம் பிறந்ததில் இருந்தே, வளிமண்டல காற்று மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மழைப்பொழிவு காணப்படுகிறது.மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் கன மழை பெய்ததால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சித்திரைச்சாவடி அணைக்கட்டில் விநாடிக்கு, 830 கனஅடி, வழங்கு வாய்க்காலில் 85 கனஅடி தண்ணீர் வெளியேறியது. அதனால், குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது.குனியமுத்துார் அணைக்கட்டில் 310 கனஅடி, உக்கடம் அணைக்கட்டில் 160 கனஅடி, குறிச்சி அணைக்கட்டில், 220 கனஅடி, வெள்ளலுார் அணைக்கட்டில், 200 கனஅடி தண்ணீர் சென்றது.
நொய்யல் ஆற்றில், 25 கனஅடி தண்ணீர் சென்றது.குனியமுத்துார் செங்குளம், வெள்ளலுார் குளங்களை கடந்து, ஒட்டர்பாளையம், சூலுார் குளங்களுக்கு தண்ணீர் சென்றது. அதேபோல், நரசாம்பதி குளத்தை கடந்து, கிருஷ்ணாம்பதி மற்றும் செல்வம்பதி குளங்களும் நிரம்புகின்றன.
மிக முக்கியமாக, குனியமுத்துார் செங்குளம் மற்றும் பேரூர் சுண்டக்காமுத்துார் குளங்களை நிரப்பும் பணியில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.அத்துறையினர் கூறுகையில், 'நேற்று காலையில், ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விட்டோம்.
மதியத்துக்கு பின், நீர் வரத்து குறைந்து விட்டது. மழை தொடரும் என கூறுவதால், நீர் வரத்து நிலவரங்களை தொடர்ந்து கண்காணிக்கிறோம்.வெள்ளலுார் அணைக்கட்டு பகுதியில், ஆகாயத்தாமரையால் அடைப்பு ஏற்பட்டதால், குளத்துக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டது. அடைப்புகளை நீக்கி, தண்ணீர் அனுப்பப்படுகிறது' என்றனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'பருவ மழைக்கு முன் குளங்களை தயார்படுத்தி வைத்திருக்கிறோம். ஆனால், நீர் வழித்தடத்தை சரியாக பராமரிக்காததால், ஆங்காங்கே அடைப்புகள் உள்ளன.உக்கடம் பெரிய குளத்துக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் சேத்துமா வாய்க்காலில், நாணல் புற்கள் வளர்ந்திருக்கின்றன. அதனால், தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.போத்தனுார் சாய் நகர் பகுதியிலும் உடைப்பு ஏற்பட்டது.
நீர் வழங்கு வாய்க்கால்களை சீரமைத்து, நீர் நிலைகளுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் எடுத்துச் செல்ல கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்றனர்.10 குளங்கள் 'புல்'லா இருக்கு!நொய்யல் ஆறு வழித்தடத்தில், கோவை மாவட்டத்தில், 24 குளங்கள் இருக்கின்றன. இதில், உக்குளம், புதுக்குளம், கோளராம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, முத்தண்ணன் குளம், கங்கநாராயண் சமுத்திரம், சொட்டையாண்டி குட்டை, சிங்காநல்லுார், இருகூர் ஆகிய, 10 குளங்களில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளதாக, பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில், கிருஷ்ணாம்பதி, முத்தண்ணன் குளம், சிங்காநல்லுார் மற்றும் இருகூர் குளங்களில், கழிவு நீரும் கலந்து தேங்கியிருப்பதால், பழைய தண்ணீரை வெளியேற்றி விட்டு, மழை நீரை தேக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. செல்வ சிந்தாமணியில் 90 சதவீதம், ஒட்டர்பாளையத்தில், 95 சதவீதம், கண்ணர்பாளையம் குளத்தில் 90 சதவீதம், செம்மாண்டம்பாளையம் - 90 சதவீதம், பேரூர் பெரிய குளம், வாலாங்குளம், உக்கடம் பெரிய குளம், சூலுார் பெரிய குளங்களில், 80 சதவீதம் தண்ணீர் தேக்கப்பட்டிருக்கிறது.
நீலாம்பூர் குளத்தில், 60 சதவீதமும், குனியமுத்துார் செங்குளம் மற்றும் வெள்ளலுார் குளத்தில், 40 சதவீதமும் தண்ணீர் தேக்கப்பட்டிருப்பதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.சிறுவாணியில் 163 மி.மீ., மழைசிறுவாணி அணை அமைந்திருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கண்கள் திரும்பிப் பார்க்கும் இடங்களில் புதிது புதிதாக சிற்றருவிகள் உருவாகி இருக்கின்றன.
அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருக்கிறது. நேற்று முன்தினம் பெய்த கன மழையால், நீர் மட்டம் உயர்ந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 163 மி.மீ., பதிவாகியிருந்தது. தண்ணீர் திறந்து விட்டதால், 42.52 அடியாக குறைந்திருந்த நீர் மட்டம், 44.58 அடியாக உயர்ந்தது.கன மழை காரணமாக, சில நாட்களுக்கு முன், 40 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன்பின், மழை குறைந்ததால், 20 செ.மீ., ஆகவும், நேற்று முன்தினம், 10 செ.மீ., ஆகவும் மதகு உயரம் சற்று குறைக்கப்பட்டது.
மழையின் வேகம் மீண்டும் அதிகரித்ததால், நேற்று, 42 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அருவிகளில் நீர் வரத்து காணப்படுவதால், நீர் மட்டம் சரியாமல் இருக்கிறது.
கோவையில் மழை நிலவரம்:
கோவை தெற்கு தாலுகா - 42 மி.மீ.,விமான நிலையம் - 39.2 மி.மீ.,பெரியநாயக்கன்பாளையம் - 25 மி.மீ.,வேளாண் பல்கலை - 39.2 மி.மீ.,சூலுார் - 33 மி.மீ.,அன்னுார் - 6 மி.மீ.,மேட்டுப்பாளையம் - 4.5 மி.மீ.
-சுரேந்தர், S.ராஜேந்திரன்.
Comments