சிங்கம்புணரி அருகே கனமழையுடன் சூறைக்காற்று! சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு! உடனடியாகச் சரிசெய்த அரசு அதிகாரிகள்!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் நேற்று மாலை 7மணியளவில் கனமழை (34மி.மீ) பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மருதிப்பட்டிக்கும், எம்.கோவில்பட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் கனமழையுடன் பலத்த வேகத்தில் சூறாவளி காற்றும் வீசியது.
இதனால் திருப்பத்தூர் - சிங்கம்புணரி தேசிய நெடுஞ்சாலையில் 5க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையில் சாய்ந்தன. இதனால், அப்பகுதியில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாகத் தகவலறிந்த சிங்கம்புணரி தீயணைப்புத்துறையினர் சிறப்பு அலுவலர் பிரகாஷ் தலைமையில் மரங்களை அகற்றுவதற்காக விரைந்து வந்தனர்.அதேபோல் சதுர்வேதமங்கலம் காவல்துறையினர், சிங்கம்புணரி கிராம நிர்வாக அதிகாரி சிலம்பரசன், முறையூர் கிராம நிர்வாக அதிகாரி நடராஜ் மற்றும் போக்குவரத்து காவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த பலர் ஜேசிபி இயந்திங்களை வரவழைத்து உதவி செய்தனர்.
அரசு அலுவலர்களும் பொதுமக்களும் இணைந்து, கடும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலையின் நடுவே கிடந்த மரங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்திற்கு வழி செய்தனர்.மீட்புப்பணியினை சிறப்பாக செய்து முடித்த அனைத்து அரசுப் பணியாளர்களையும், பொதுமக்களையும் அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
சாலை விரிவாக்கப் பணியின் காரணமாக மருதிப்பட்டி பகுதியில் உள்ள மரங்கள் அடிக்கடி சாலையில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டிய அதே நேரத்தில், அடுத்தடுத்து விபத்துக்கள் நேர்வதால், நெடுஞ்சாலைத்துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.இதேபோல் திருப்பத்துர் - மேலூர் தேசிய நெடுஞ்சாலையில், சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் அருகிலும் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
- அப்துல்சலாம், பாரூக்.
Comments