வடசித்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஹிந்தியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு!!
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது வடசித்தூர். சேலத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு எரிவாயு கொண்டு செல்ல குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த குழாய் எந்தெந்த வழியாக செல்கிறது என்ற விவரம் குறித்த நோட்டீஸ் வடசித்தூர் கிராம நிர்வாக அதிகாரி ராமலிங்கத்துக்கு கிடைத்தது. உடனே அவர் அந்த நோட்டீசை தனது அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்.
பின்னர் விவசாயிகளுக்கு தெரிவிக்கும் வகையில் அந்த நோட்டீசை அந்த அலுவலகத்தின் வெளியே இருக்கும் தகவல் பலகையில் ஊழியர்கள் ஒட்டி உள்ளனர். அந்த நோட்டீசில் இருந்த அனைத்து தகவலும் இந்தியில் எழுதப்பட்டு இருந்தது. இதை பார்த்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் அதில் எழுதப்பட்டு இருந்த தகவல் எதுவும் அவர்களுக்கு புரியவில்லை. இந்த தகவல் அந்தப்பகுதியில் காட்டுத்தீ போன்று பரவியது. அத்துடன் பலர் அங்கு குவிந்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த தி.மு.க. நிர்வாகிகள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அவர்கள் இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு பேசினார்கள்.
பின்னர் அந்த அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு இருந்த இந்தியில் அச்சடிக்கப்பட்ட நோட்டீசை கிழித்து அகற்றினார்கள். இதையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதுபோன்று இந்தியில் நோட்டீஸ் ஒட்ட வேண்டாம் என்றும், தமிழிலேயே ஒட்ட வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகிகள் வலியுறுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-S.ராஜேந்திரன்.
Comments