சிங்கம்புணரி காவல் நிலையம் எதிரே விபத்து! கொட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் பலி!
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி யைச் சேர்ந்தவர் சுப்புராஜ்(வயது65). இவர் நேற்று சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரிக்கு வீடு வாடகைக்குப் பிடிப்பதற்காக வந்துள்ளார். மாலையில் கொட்டாம்பட்டிக்குத் திரும்புவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் பயணித்திருக்கிறார். அவர் சிங்கம்புணரி காவல்நிலையம் எதிரே உள்ள தடுப்பிற்கு அருகில் வந்தபோது, எதிரே மதுரையிலிருந்து பொன்னமராவதி செல்லும் அரசுப் பேருந்து வந்துள்ளது.
அப்போது நிலைதடுமாறிய சுப்புராஜ் பேருந்தின் மீது நேருக்கு நேராக மோதியதில், தலைக்கவசம் அணியாததால் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். சுப்புராஜின் சடலத்தைக் கைப்பற்றிய சிங்கம்புணரி காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக சிங்கம்புணரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து சிங்கம்புணரி காவல் சார்பு ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்துள்ளார். காவல் ஆய்வாளர் சீராளன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
-ராயல் ஹமீது, அப்துல்சலாம்.
Comments