காரைக்குடியில் போக்குவரத்துக் கிளை மேலாளர் மீது தாக்குதல்! போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உரிய நேரத்திற்கு பேருந்துகளை இயக்குவது குறித்து அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் தலையிட்டு, பேச்சுவார்த்தை நடத்திய அரசு போக்குவரத்து காரைக்குடி கிளை மேலாளர் சண்முக சுந்தரத்தை தனியார் பேருந்து ஓட்டுநர்களும் அதன் நேரக்காப்பாளரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அன்பு, கண்ணன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
சம்பவத்திற்கு காரணமான தனியார் பேருந்து நேரக்காப்பாளர் ராமு மற்றும் அவரது நண்பர் இருவரையும் கைது செய்யக்கோரி நேற்று காரைக்குடி பணிமனையில் இருந்து பேருந்துகளை இயக்க மறுத்து அரசு போக்குவரத்து ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் 84 நகர மற்றும் வெளியூர் பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தப்பட்டது. எனவே, அரசு போக்குவரத்து கழக காரைக்குடி கிளை அதிகாரிகளுடன் வருவாய் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஓட்டுனர்கள் போராட்டத்தை கைவிட்டு பேருந்துகளை இயக்கினர்.
- பாரூக், சிவகங்கை.
Comments