வாகனத்தில் ஏற்பட்ட பழுதால் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து! சுற்றுலாவிற்கு வந்தவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்! !

  -MMH
   கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஸ்ரீராமபுரம் பகுதியைச் சேர்ந்த 12 பெண்கள், 13 ஆண்கள் என மொத்தம் 25 பேர் கடந்த 13-ந் தேதி வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர். தொடர்ந்து அவர்கள் வால்பாறை பகுதியில் தங்கியிருந்து சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர். இதையடுத்து அவர்கள் நேற்று காலை 7 மணியளவில் வால்பாறையில் இருந்து சுற்றுலா வேன் மூலம் பெங்களூருக்கு புறப்பட்டனர்.

சுற்றுலா வேனை திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தீபக் (வயது 28) என்பவர் ஓட்டினார். வால்பாறை -பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் 21-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்தது. 

அப்போது ஈச்சந்தட்டி மேடு பகுதியில் வந்தபோது, திடீரென வேன் எந்திர கோளாறு காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர். 

அவர்களில் 3 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியிலும், 4 பேர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து தகவல் அறிந்து வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில் காடம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் விபத்து குறித்து காடம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-  S.ராஜேந்திரன் .

Comments