தள்ளு மாடல் வண்டி இத தள்ளி விடுங்க! அடிக்கடி பழுது ஏற்பட்டு நடுவழியில் நிற்கும் அரசு பேருந்துகளால் பயணிகள் கடும் அவதி!!

   -MMH

மலைப்பிரதேசமான வால்பாறைக்கு பொள்ளாச்சி, கோவை, பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப் பட்டு வருகின்றன. அதுபோன்று வால்பாறை டெப்போவில் இருந்து தாலுகாவில் உள்ள நகர்பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு மொத்தம் 42 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 8 பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அவை அடிக்கடி பழுதாகி வழியில் நிற்பதால் அதில் பயணம் செய்து வரும் பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள். 

இது குறித்து பயணிகள் கூறியதாவது:
"வால்பாறை மலைப்பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பெரும்பாலானவை ஒழுகும் நிலையில் தான் இருந்து வருகிறது. அத்துடன் வால்பாறை தாலுகா பகுதியில் இயக்கப்படும் பஸ்களும் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்கிறது. குறிப்பாக வனப்பகுதி வழியாக செல்லும் பஸ்கள் பழுதாகி நடுவழியில் நிற்பதால் அங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஈட்டியார் எஸ்டேட் பகுதிக்கு சென்று விட்டு வால்பாறை வந்த அரசு பஸ் புதிய பஸ்நிலையம் அருகே திடீரென்று நின்றது. பஸ் டிரைவர் எவ்வளவோ முயன்றும் அந்த பஸ்சை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் இறங்கி அந்த பஸ்சை தள்ளும் நிலை ஏற்பட்டது. எனவே இதுபோன்று பல சம்பவங்கள் நடப்பதால் பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த நிலை நீடிப்பதை தடுக்க மலைப்பகுதியான வால்பாறையில் நல்ல நிலையில் இருக்கும் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கூறினார்கள். 

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments