கோதவாடி குளத்திற்கு தண்ணீர் வருமா விவசாயிகள், பொதுமக்கள் ஏக்கம் ! வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை!

 

-MMH

    கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் கோதவாடி குளம் உள்ளது. 152 ஏக்கர் பரப்பளவில் உள்ள மிக பெரிய குளமாகும். தற்போது பருவமழை சரிவர பெய்யாததால் கோதவாடி குளம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்த குளத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற கோதவாடிகுளம் பாதுகாப்பு அமைப்பு, தன்னார்வ அமைப்புகள் விவசாயிகள், பொதுமக்கள் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இணைந்து குளத்தில் உள்ள  முட்புதர்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த குளத்தில் கரைகளையும் இந்த குளத்திற்கு வரும் நீர்வழிப் பாதைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அதன்படி தற்போது இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் நீர்வழி பகுதிகளான கோதவாடி குளத்தில் கிழக்கு பகுதியில் உள்ள பொன்னாங்காணி, போகம்பட்டி, இடையர்பாளையம், பனப்பட்டி, காரச்சேரி, வடசித்தூர், ஆண்டிபாளையம், குருநெல்லிபாளையம், அரசம்பாளையம், கொண்டம்பட்டி ஆகிய நீர்வழிப் பாதைகள் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

அண்மையில் பெய்த மழையால் கோவையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் கோதவாடி குளத்திற்கு சிறிதளவு கூட மழைநீர் வரவில்லை. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் கவலை அடைந்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்து தண்ணீர் வீணாக கடலில் கலந்து கொண்டிருக்கிறது. கோதவாடி குளத்திற்கு ஏற்கனவே விவசாயிகள் சார்பில் மழை காலங்களில் அணைகளிலிருந்து வீணாக செல்லும் உபரி தண்ணீரை கொடுத்து உதவ வேண்டும் என்று விவசாயிகள், ஊராட்சிமன்ற தலைவர்கள் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளிடம் இருந்து எந்த தகவலும் வராததால் தற்போது அணைகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் வீணாக கடலுக்கு சென்று கலந்து வருகிறது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே விவசாயிகளின் கோரிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அணையில் இருந்து வீணாக கடலுக்கு செல்லும் உபரிநீரை கோதவாடி குளத்திற்கு நிரந்தரமாக பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்  

-S.ராஜேந்திரன்.

Comments