தெக்கூர் அருகே மின்னல் தாக்கி ஒரு நபரும், காளை மாடு ஒன்றும் பலி!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்துர் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது திருப்பத்தூர் வட்டம், தெக்கூர் அருகே உள்ள ஓவலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஒய்யப்பன் மகன் மகாலிங்கம் (வயது 52) ஓவலிகண்மாய் அருகே உள்ள தனது வயலில் வழக்கம் போல் கன மழைக்கிடையே வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நெற்குப்பை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த காவல் ஆய்வாளர் செல்வகுமாரி, மகாலிங்கத்தின் உடலைக் கைப்பற்றி பொன்னமராவதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மின்னல் தாக்கி விவசாயி மகாலிங்கம் அந்தக் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
அதேபோல, அருகிலுள்ள மகிபாலன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாஸ்கரனின் மஞ்சுவிரட்டு காளை மாடு கன மழை நேரத்தில் வயலில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது மின்னல் தாக்கி அந்தக் காளைமாடு சம்பவ இடத்திலேயே பலியானது. இது குறித்து கால்நடை மருத்துவருக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் அளித்த தகவலின்பேரில் இறந்து போன மஞ்சுவிரட்டு மாட்டினை பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்பு அடக்கம் செய்யப்பட்டது.
- அப்துல்சலாம், திருப்பத்தூர்.
Comments