இதுவும் வெற்றிதான்..!! ஒரு ஓட்டு பாஜக வேட்பாளருக்கு அடித்த அதிஷ்டம்...!!!
குருடம்பாளையம் கார்த்திக் இப்போது இவர்தான் உலக அளவில் ட்ரெண்டிங். காரணம் உள்ளாட்சி தேர்தலில் இவர் வாங்கிய அந்த ஒரு ஓட்டு தான்.
சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டா உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் இவரது ஒத்த ஓட்டு பற்றிய தகவல்கள் பரவி கிடந்தன. அதில் ஒத்த ஓட்டு பெற்ற பா.ஜனதா வேட்பாளர், குடும்பத்தில் 5 பேர் இருந்தும் ஒரு வாக்கு பெற்ற பா.ஜனதா வேட்பாளர், என்ற வாசகங்களுடன் அடங்கிய மீம்ஸ்கள் சமூக வலைதளத்தை நேற்று முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது.
இதுதவிர சிலர் சமூக வலைதளங்களில் ஒத்த ஓட்டு பா.ஜ.க என்று ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கினர். இந்த ஹேஷ்டேக் நேற்று முழுவதும் டிரெண்ட் ஆகி முதல் இடத்தை பிடித்தது. இதேபோல் சிங்கிள் ஓட்டு பி.ஜே.பி என்ற ஹேஷ்டேக்கும் வேகமாக டிரெண்டிங்காகி 3-வது இடத்தில் இருந்தது. நேற்று இந்தியா முழுவதுமே இந்த ஒத்த ஓட்டு பற்றிய பேச்சுதான் எங்கு பார்த்தாலும் பரவி இருந்தது.
இதற்கிடையே ஒரு ஓட்டு பெற்ற கார்த்திக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கட்சிக்காக ஆற்றிய பணிகள், அவரது செயல்பாடுகள் அனைத்தையும் அறிந்து வருங்காலத்தில் பா.ஜனதாவின் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அவர் கூறுகையில் ;
"இங்குள்ள பொதுமக்களுக்கு நான் யார் என்று தெரியாது. அவர்களுடன் எனக்கு பரிட்சயமும் கிடையாது. ஆனால் புதிய தொகுதி என்பதாலும், அறிமுகம் இல்லாததாலும் நான் தோற்றுவிட்டேன். கிடைத்த ஒரு வாக்கையும் நான் மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கிறேன். இதனை சந்தோஷமாக ஏற்று கொள்கிறேன். என்னை பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் மீம்ஸ்களை பற்றி கவலைப்படவில்லை. அது எனக்கு உத்வேகத்தையே கொடுக்கிறது."
இந்த ஒரு ஓட்டு தனக்கு கட்சியில் ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது மட்டும் அல்லாமல் உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது வேட்பாளருக்கு மகிழ்ச்சிதான் போல.
-முஹம்மது சாதிக் அலி.
Comments