மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்! சோகத்தில் கதறும் குடும்பம்!

 -MMH

திருச்சியில் குறிசொல்பவர் போல நடித்து நகையை திருடிச் சென்றதால், ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாத குடும்பத் தலைவி ஒருவர், தனது உயிரை மாய்த்துக் கொண்டதால் குடும்பமே கண்ணீரில் மிதக்கிறது.

திருச்சி, திருவானைக்காவலில் உள்ள பாரதி தெருவில் வசித்து வந்தனர் சுகந்தி - ஜெகன் தம்பதி. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. 9 மாத கைக்குழந்தையுடன் இவர்களது இல்லறம் கடந்த மாதம்வரை இனிமையாகவே சென்றிருந்தது. மணம் வீசும் மலருக்குள் நாகம் புகுவது போல, கடந்த மாதம் அவர்களது வீட்டிற்குள் புகுந்தார் போலி குறிசொல்லும் ஆசாமி ஒருவர்.

கடந்த மாதம்14-ந்தேதி சுகந்தி வீட்டில் தனியாக இருந்த போது, ஜோதிடம் பார்ப்பதாக கூறி 35 வயது மர்ம ஆசாமி ஒருவர் வந்துள்ளார். குடும்பத்தில் இருக்கும் பொதுவான பிரச்னைகளை குறிசொல்வதுபோல மெல்ல ஆரம்பித்த அந்த ஆசாமி, சட்டென கணவர் மற்றும் குழந்தையின் உயிருக்கே கண்டம் இருப்பதாக கூறியிருக்கிறார். 

சுகந்தி அச்சத்தில் உறைந்து இதற்கு எதுவும் பரிகாரம் உண்டா என்று கேட்டிருக்கிறார். பரிகாரம் செய்து கொண்டால் மட்டுமே நிவர்த்தியாகி வாழ்வில் வளம் சேரும் எனச் சொல்லியிருக்கிறார். இதனை நம்பி என்ன பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டதோடு பரிகார பூஜைக்கு ஒப்புக்கொண்டனர்.

பூஜையில் வைத்த பால் நிரம்பிய செம்பில் சுகந்தி அணிந்திருந்த தாலிசெயினை கழட்டிப் போடும்படி குடுகுடுப்பைக்காரர் சொல்லியிருக்கிறார். இதை நம்பி சுகந்தியும் இரண்டு பவுன் நகை கழட்டிப் போட்டுள்ளார்.

சிறிது நேரம் மந்திரங்கள் சொல்வது சொல்லிவிட்டு, "உங்களைப் பிடிச்ச தோஷம் போக்க முச்சந்தியில கழுப்பு கழிக்கணும். நான் கழிச்சிட்டு வரும் வரையில் வீட்டு வாசல் கதவை திறக்கக்கூடாதுன்னு" சொல்லிவிட்டுச் சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. அதன் பிறகுதான் சுகந்திக்குத் தெரிந்திருக்கிறது தாலியைக் கழற்றிக் கொடுத்து ஏமாந்து விட்டோம் என்று, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு விஷயம் தெரிந்ததும் தாலி விஷயத்துல இப்படி ஏமாறலாமா என்று ஏளனமாகப் பேச, இதனால் மனவேதனையிலிருந்து வந்த சுகந்தி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

'மூடநம்பிக்கைகளை மூலதனமாக வைத்து ஏமாற்றுபவர்களை காவல்துறையினர் விரைந்து கைது செய்தால் மட்டுமே தங்கள் குடும்பத்திற்கு நேர்ந்த கதி பிறருக்கும் ஏற்படாது' என சுகந்தியின் தாயார் கண்ணீர் மல்கக் கூறினார்.

-ராயல் ஹமீது.

Comments