கர்நாடகாவில் அதிவேகமாகப் பரவிவரும் புதிய AY.4.2 வைரஸ்! தமிழ்நாட்டுக்கு ஆபத்தா?

   -MMH

  இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரம் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

AY.4.2 உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாகப் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் மட்டும் 17 பேருக்கு AY.4.2 வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. ஆந்திராவில் 7, கர்நாடகாவில் 2, தெலுங்கானாவில் 2, கேரளாவில் 4, ஜம்மு காஷ்மீர் மற்றும் மகாராஷ்ட்ராவில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் கூறியது.

இந்நிலையில் கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. இதில் 3 பேர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள், 4பேர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

புதிய AY.4.2 வைரஸ் பரவுவதால் வெளிநாடுகளிலிருந்து வருவோர் 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கர்நாடகாவில் 7 பேருக்கு மரபணு மாற்றமடைந்த AY.4.2 வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவனமுடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கர்நாடகாவில் AY.4.2 தொற்று பரவுவதால் அதை ஒட்டியுள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த தொற்று முந்தைய உருமாற்றமடைந்த கொரோனாவை விட 6 மடங்கு வேகமாகப் பரவும் எனக் கூறப்படுவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தமிழகத்தில் AY.4.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

- ராயல் ஹமீது.

Comments