கொங்கு மண்டலத்தில் தொழில் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி வரை முதலீடு செய்ய திட்டம்!! சோஹோ நிறுவன தலைமை அதிகாரி தகவல்!!

 -MMH

கொங்கு மண்டலத்தில் தொழில் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை முதலீடு செய்து உதவுவோம்.

சோஹோ  நிறுவன தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற சோகோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு கொங்கு மண்டலத்தில் உள்ள கரூர், ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை நகரங்களில் ஒரு வாரமாக  சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் உள்ளூர் தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார். கோவையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறுகையில், கொங்கு மண்டலத்தின் வளமைக்கு, இங்கு இருக்கும் பல தரப்பட்ட தொழில் துறைகள் மற்றும் அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பும், சமுதாய அர்ப்பணிப்பும்  முக்கிய காரணமாகும். தற்போதைய நிலையில் இருந்து ஜப்பான், தைவான், தென் கொரியா போன்ற நாடுகளைப் போல் முழுமையாக கொங்கு மண்டலம் வளர்ச்சி அடைய வேண்டும். இதற்கு நாம் ஆராய்ச்சி மற்றும் தொழில் மேம்பாட்டிற்கு முதலீடு செய்ய வேண்டும்.

கொங்கு மண்டலத்தில் தொழில் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக்காக ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை உதவ முன் வந்துள்ளோம். இங்குள்ள தொழில் அமைப்புகளுடன் இணைந்து ஆராய்ச்சியை மேம்படுத்தி, நவீன கருவிகளை உருவாக்கி, கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

அதுமட்டுமின்றி சோஹோவின்  பரந்த ஆராய்ச்சி மற்றும் தொழில் மேம்பாட்டு அனுபவமும் இதில் முக்கிய பங்கு வகிக்கும். சோஹோ மற்றும் கொங்கு மண்டலத்தில் உள்ள பல துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கும் இந்த கூட்டமைப்பின் மூலம் நாம் இப்பகுதியை மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும். 

இதன் மூலம் தமிழ்நாட்டை இந்தியா முழுவதற்கும் ஒரு முன்மாதிரியாக மாற்ற முடியும். இந்த முயற்சியை ஒரு நிறுவனத்தால் மட்டும் செய்ய முடியாது. சோஹோ  உள்ளூர் நிறுவனங்களுடன் ஒரு கூட்டமைப்பை அனைத்து கொங்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு தொழிற்துறைகளில் குறிப்பாக ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு, நூற்பாலைகள், வேளாண்மை,  எந்திரவியல் உள்ளிட்டவற்றில் பங்கேற்கும் என்றார் .பேட்டியின் போது சிபி என்.பி. ஆனந்த்  உடனிருந்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments