சிங்கம்புணரி அருகே வறுமையின் கொடுமையால் மருத்துவம் பார்க்க இயலாமல் பெண் தற்கொலை!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் வெள்ளிகுன்றம்பட்டியைச் சேர்ந்தவர் போதும் பொண்ணு (26). கடந்த 2015-ல் போதும்பெண்ணின் கணவர் வேல்முருகன் இறந்துவிட்டார்.
அன்றிலிருந்து தனது 72 வயது மாமனார், 70 வயது சின்ன மாமனார் என வயது முதிர்ந்தவர்கள் இரண்டு பேர், 20 வயது மனநலம் குன்றிய கொழுந்தனார் மற்றும் 6 மற்றும் 7 வயதுள்ள தனது குழந்தைகளுடன் வெள்ளிகுன்றம்பட்டியில் வசித்து வந்தார். போதும்பொண்ணு தினக்கூலியாகச் சென்று, கிடைத்த பணத்தை வைத்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆறு வருடங்களாக கர்ப்பப்பை பிரச்சனையால் வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்ட போதும்பொண்ணு, கடந்த ஆகஸ்ட் 31 செவ்வாய்க்கிழமையன்று அருகில் உள்ள மலைக்குச் சென்று அங்கிருந்த விஷச் செடிகளை பறித்து தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதன்பின், அவராகவே சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு மூன்று தினங்கள் சிகிச்சையில் இருந்த போதும்பொண்ணை, மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேல் சிகிச்சைக்காக போதும்பொண்ணு மதுரைக்கு அனுப்பப்பட்ட நிலையில், சிகிச்சைக்கு பணமில்லாத காரணத்தால் அங்கிருந்து அவரை கடந்த 4ஆம் தேதி சனிக்கிழமை சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர்.சனிக்கிழமை இரவு உறங்கச் சென்ற அவர், ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்திருக்கவில்லை. அவரது குழந்தைகள் காலையில் உணவுக்காக தாயாரை எழுப்பும்போது போதும்பொண்ணு இறந்துவிட்டது தெரியவந்தது. கொட்டாம்பட்டி அருகே சூரப்பட்டியில் உள்ள அவருடைய அப்பா மூக்கனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மூக்கன் கொடுத்த புகாரின் அடிப்படையில் உலகம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி, சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நடக்கமுடியாத முதியவர்கள் இரண்டுபேர், மனவளர்ச்சி குன்றிய மைத்துனர், 6 மற்றும் 7 வயதுள்ள குழந்தைகள் ஐந்து பேரும் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அனாதையாக நிற்கும் இந்தக் குடும்பத்தாருக்கு கிராமத்தினர் ஆறுதல் கூறி வருகின்றனர். ஆதரவற்ற குடும்பத்தார் 5 பேரை தவிக்க விட்டுச்சென்ற தாய் போதும்பெண்ணின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அனாதையாக நிற்கும் இந்த குடும்பத்தினருக்கு மறுவாழ்வு கிடைக்க, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
- அப்துல்சலாம், ராயல் ஹமீது.
Comments