காஞ்சீபுரம் நகராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்!!

  -MMH

   காஞ்சீபுரம் நகராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம் நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம பகுதிகள் என 600 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றது.

இந்த முகாமானது நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. மேலும் நடமாடும் வாகன முகாம்கள் மூலமாகவும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஒவ்வொரு தடுப்பூசி முகாமிலும் தடுப்பூசி போடுவதற்காக நர்சுகள், தகவல்களை பதிவிடுவதற்காக தகவல் பதிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து வர 4 நபர்கள் முறையே சத்துணவு பணியாளர்கள், உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறையை சேர்ந்த பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதல் தவணை தடுப்பூசி போட்டுகொள்ளாதவர்கள் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி நிலுவையில் இருந்தவர்கள் இந்த முகாமில் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். காஞ்சீபுரம் நகராட்சியில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அதன் தொடர்ச்சியாக ஒலிமுகமது பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி, சிறு காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற சிறப்பு முகாமையும், வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம் ஒன்றியம் திம்மசமுத்திரம் போன்ற இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்தி கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.

கொரோனாவை தடுப்பதற்கு நம் கையில் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி. ஆகவே அனைவரும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தினார். மேலும் காஞ்சீபுரம் நகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம் மாவட்ட கலெக்டர் நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பழனி, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் லட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

காஞ்சீபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்திகொள்ளும் நபர்களில் குலுக்கல் முறையில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, தங்க நாணயம், 10 நபர்களுக்கு ஆறுதல் பரிசுகள் தர உள்ளதாக நிர்வாகம் அறிவித்திருந்தது.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் 99 முகாம்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. ஒன்றியத்தில் நடைபெற்ற கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், முத்துக்குமார் ஆகியோர் முகாம் நடைபெறும் பகுதிகளுக்கு நேரில் சென்று சமூக இடைவெளி கடைபிடிக்க படுகிறதா? பொதுமக்கள் முககவசம் அணிந்துள்ளனரா? என்று ஆய்வு செய்தனர்.

காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செவிலிமேடு ஆரம்ப சுகாதார நிலையம், சின்னகாஞ்சீபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், பி.டி.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி, ஆற்காடு நாராயணசாமி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜவகர்லால் நேரு மார்க்கெட், மீன் மார்க்கெட், ஜவகர்லால் தெரு மற்றும் ஓரிக்கை போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். காஞ்சீபுரம் மாவட்டத்தில் 60 ஆயிரத்து 40 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக கலெக்டர் தெரிவித்தார்.

-வேல்முருகன் சென்னை.

Comments