வால்பாறையில் காட்டு யானைகள் அட்டகாசம் ; தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையோ படுமோசம் !!

 

-MMH

     வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி விட்டது. வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் வனப்பகுதிக்குள் மட்டும் 14 காட்டுயானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த 3 யானைகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிங்கோனா பத்தாம்பாத்தி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. தொடர்ந்து அங்குள்ள மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையை உடைத்து அட்டகாசம் செய்தன. பின்னர் கடைக்குள் நுழைந்து ரேஷன் அரிசி மூட்டைகளையும், கோதுமை மூட்டைகளையும் துதிக்கையால் வெளியே தூக்கி வீசியும், தின்றும் சேதப்படுத்தின.

இதை அறிந்து திரண்டு வந்த எஸ்டேட் தொழிலாளர்கள் யானைகளை விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லாமல் ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை தின்று கொண்டு இருந்தன. இதுகுறித்து மானாம்பள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க நீண்ட நேரம் முயற்சித்தும் செல்போன் சிக்னல் கிடைக்காததால், தொழிலாளர்களால் அது முடியவில்லை. அதன்பிறகு பல்வேறு உயரமான இடங்களில் நின்று முயற்சித்து நள்ளிரவு 1 மணியளவில் செல்போன் மூலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் தொழிலாளர்களுடன் இணைந்து யானைகளை விரட்டியடித்தனர். யானைகள் வனப்பகுதிக்கு செல்லும்போது ரேஷன் அரிசி மூட்டையையும் தூக்கி சென்றன. கார்டுதார்களுக்கு வழங்க வைத்திருந்த அரிசி, கோதுமை ஆகியவற்றை யானைகள் சேதப்படுத்தியதால், நேற்று எஸ்டேட் பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க முடியாமல் போய்விட்டது.

இதேபோன்று சிங்கோனா எஸ்டேட் 2-வது பிரிவு குடியிருப்பு பகுதிக்குள் நேற்று அதிகாலையில் 6 யானைகள் கொண்ட கூட்டம் புகுந்தது. தொடர்ந்து டேன்டீ பணிமனைக்கு அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்தன. பின்னர்கோவிலுக்குள் புகுந்து அம்மனுக்கு பயன்படுத்த வைத்திருந்த சேலைகள் உள்பட அலங்கார பொருட்கள், உண்டியல், மணி ஆகியவற்றை சேதப்படுத்தின. 

மேலும் வளாகத்தில் இருந்த மதுரை வீரன் சிலையை உடைத்தன. அதனருகில் குதிரை மீது அமர்ந்திருக்கும் வேட்டை கருப்பசாமி சிலை இருந்தது. ஆனால் திரைச்சீலையை கிழித்து குதிரையை கண்டதும் மிரண்ட யானைகள், அந்த சிலையை மட்டும் உடைக்காமல் சென்றுவிட்டன. 

சிங்கோனா எஸ்டேட் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காட்டுயானைகள் கூட்டம் முகாமிட்டு உள்ளதால் சிங்கோனா, உபாசி, பெரியகல்லார் ஆகிய எஸ்டேட் பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் அச்சத்திலும், பீதியிலும் இருந்து வருகின்றனர். எனவே மக்கள் இரவில் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன். திவ்ய குமார்.

Comments