அரிவாளால் பிறந்தநாள் கேக் வெட்டி கெத்து காட்டிய இளைஞர்! கொத்தாக வந்து தூக்கிய போலீசார்!!

    -MMH
 
தூத்துக்குடி அருகே அரிவாளால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி சமூக வலைதளத்தில் பரப்பிய இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து 5 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டப்பிடாரம் அருகே கச்சேரி தளவாய்புரம் தெற்குதெருவைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மகன் கலைச்செல்வன்(20). கடந்த செப்டம்பர் 19-ம் தேதி இவருக்கு பிறந்தநாளாகும்.

தன்னுடைய பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டார் கலைச்செல்வன். இதனால் தனது நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தின் சீட்டில் பிறந்தநாள் கேக்கை வைத்து அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் இதனை செல்போனிலும் வீடியோவாக ஒளிப்பதிவு செய்து வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் கலைச்செல்வன் மற்றும் அவரது நண்பர்கள் பகிர்ந்துள்ள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்படும் வகையில் இந்த வீடியோ அமைந்து இருந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இதனை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மேற்பார்வையில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எபினேசர் தலைமையிலான போலீசார், தீவிர விசாரணை நடத்தி அரிவாளைக் கொண்டு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய கலைச்செல்வனை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 அரிவாள் மற்றும் அதற்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

தமிமிழகத்தில் இதுபோல் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது பொது அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்தும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு கைதாகும் இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும், ஜாதி, மத மோதல்களை தூண்டும் வகையிலோ அல்லது உண்மைக்கு புறம்பான செய்திகளை ஆடியோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

-வேல்முருகன், தூத்துக்குடி.

Comments