கக்கன் மணிமண்டபம் பராமரிக்கப்படுமா? தும்பைப்பட்டி ஊராட்சித் தலைவரின் கோரிக்கை!
1939 முதல் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, தேசிய கட்சியான காங்கிரசின் தமிழ் மாநிலத் தலைவர் பொறுப்பு வரை வகித்து, இன்றைய அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்தவர், கக்கன். இந்திய ஒன்றியத்தின் விடுதலைப் போராட்ட வீரராகவும், விடுதலை அடைந்த இந்திய ஒன்றியத்தின் மக்களவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் அமைச்சரவையில் பல்வேறு துறைகளின் அமைச்சராக பொறுப்பு வகித்து திறம்படப் பணியாற்றியவர். பெருந்தலைவர் காமராசரின் நம்பிக்கையையும், அன்பையையும் பெற்றவர்.
இதுதவிர இன்னும் அதிகம் சிறப்புக்கு உரியவரான தமிழ்நாடு அரசின் முன்னாள் காவல்துறை அமைச்சர் கக்கன் அவர்களின் மணிமண்டபம் கடந்த 13/02/2001 அன்று அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் கக்கனார் பிறந்த மண்ணான மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் தும்பைப்பட்டியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த மணிமண்டபமானது கக்கனார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையிலும், மறைந்த கக்கனாரின் நினைவை போற்றும் விதமாகவும் இருந்து வருகின்றது. இம்மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் கீழ் செயல்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த இம்மண்டபம் பராமரிப்பின்றியும், கட்டிடத்தின் உள்பகுதியில் விரிசல்களுடனும் உள்ளது. இது தொடர்பாக தும்பைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அயூப்கான் (எ) பாட்டையா அவர்களிடம் கேட்டபொழுது, 'இம்மணிமண்டபத்தை பராமரிக்கும் பொறுப்பையும், பராமரிப்பிற்கான செலவையும் ஊராட்சி மன்றத்தின் வசம் தமிழக அரசு ஒப்படைக்கும் பட்சத்தில் எங்கள் அய்யாவின் மணிமண்டபத்தை நாங்கள் சிறப்பாக பராமரிக்க இயலும்' என்று கூறுனார். மேலும் இம்மண்டபத்தில் ஒரு நூலகமும், காவல் பணிக்கு ஆட்களும் இருக்கின்றார்கள், ஆனால் இவையாவும் சரியாக செயல்படவில்லை என்பதாக மறைந்த கக்கனார் அவர்களின் வாரிசுகள் சிலரின் கருத்தாகவும் உள்ளது.
அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்தி, அனைத்துத் தரப்பு மக்களுக்குமான ஆட்சியை வழங்கவேண்டும் என கடுமையாக உழைத்துவரும், தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் இதிலும் கவனம் செலுத்தி, தனது தந்தை கலைஞர் அவர்களால் திறக்கப்பட்ட மணிமண்டபத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பாரா என இப்பகுதி மக்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.
-மதுரை வெண்புலி.
Comments