மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உதவி உபகரணங்கள் மதிப்பீடு செய்யும் சிறப்பு முகாம்கள்!!

  MMH

    சூலுார்:மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மத்திய அரசு நிறுவனமான 'அலிம்கோ' சார்பில், கோவை மாவட்டத்தில் உள்ள, 12 ஒன்றியங்களிலும், உதவி உபகரணங்கள் மதிப்பீடு செய்யும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.சூலுாரில், எஸ்.எல்.வி., நகர் துவக்கப்பள்ளியில் நேற்று முகாம் நடந்தது.

அரசு மருத்துவமனையின், எலும்பு, கண், காது, மூக்கு, தொண்டை பிரிவு மற்றும் குழந்தைகள், மகளிருக்கான டாக்டர்கள் பங்கேற்று, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து, சான்று வழங்கினர். அலிம்கோ நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவினர், செயற்கை கை, கால், ஊன்றுகோல் உட்பட தேவை உள்ளவர்களுக்கு மதிப்பீடு செய்தனர். புதிதாக ஸ்மார்ட் கார்டு பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சூலுார் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயஸ்ரீ, மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள், ஜெயந்தி, சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர். சூலுார் வட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, உதவி உபகரணங்கள் பெற பதிவு செய்தனர்.

-சுரேந்தர்.

Comments