திருப்பத்தூர் - சிங்கம்புணரி சாலையில் கவனக்குறைவால் அதிகரிக்கும் வாகன விபத்துகள்! நேற்றைய விபத்தில் ஒருவருக்கு கால் முறிவு!!

     -MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், கோவில்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே புதிதாக போடப்பட்ட சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளத்தில் விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் 2 பேர் படுகாயமடைந்தனர். திருப்பத்தூர் - சிங்கம்புணரி சாலையில் எம்.கோவில்பட்டி பேருந்துநிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சாலை அகலப்படுத்தும் பணியின்போது புதிதாக பாலம் அமைக்கப்பட்டு, அதன்மீது தார்ச்சாலை அமைத்து ஒரு மாதகாலம் ஆகிவிட்டது.


தற்போது பேருந்து நிறுத்தத்தின் முன்பகுதியில் பாலம் அமைந்த இடத்தில் திடீரென ஒரு குழி ஏற்பட்டுள்ளது. அது குறித்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் எந்த ஒரு அறிவிப்பும் ஒப்பந்ததாரர்களால் அவ்விடத்தில் வைக்கப்படவில்லை. நேற்று மாலை மருதிப்பட்டியை சேர்ந்த மருதன் மகன் சந்திரன்(45), வீரையா மகன் வெற்றிவேல்(29). இருவரும் சேர்ந்து நேற்று மாலை, திருக்களாப்பட்டி சென்றுவிட்டு மீண்டும் மருதிப்பட்டியை நோக்கி தங்களது இருசக்கர வாகனத்தில் வேகமாக  வந்துள்ளனர். அப்போது கோவில்பட்டி பேருந்து நிறுத்தம் முன்பகுதியில் இருந்த குழியில் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் சக்கரம் குழியில் விழுந்தவுடன், இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதனால் சந்திரனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.


வெற்றிவேலுக்கு தலையிலும், காலிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக
அவர்கள் இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூர்வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே சாலைப் பணிகள் நிறைவடையாமல் உள்ளது. புதிய சாலை நிறைவடையும் இடங்களில் எந்த ஒரு எச்சரிக்கையோ அல்லது அறிவிப்புப் பலகைகளோ இல்லை. இதனால் ஏராளமான சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. சாலையோரங்களில் உள்ள மின்கம்பங்கள் சிலவற்றை, அகற்றாமலேயே சாலை விரிவாக்கப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் விபத்துகள் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. இனி மழைகாலம் என்பதால் சாலை விரிவாக்கப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments