சிங்கம்புணரி அருகே 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! காதலன் உள்பட 6 பேர் மீது போக்சோ!! இருவர் கைது!!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி முத்தரசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது தாய், பல ஆண்டுகளுக்கு முன்பே தனது கணவரைப் பிரிந்து, கூலி வேலை பார்த்து, தனது மகளையும் பெற்றோர்களையும் பராமரித்து வருகிறார். அரியாண்டிபட்டியைச் சேர்ந்த சின்னையா மகன் செல்வராஜ்(23) என்பவரை அந்தச் சிறுமி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. செல்வராஜ் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர், செல்வராஜ் அவரது நண்பர்களான புலவாய்பட்டியைச் சேர்ந்த சின்னு மகன் சிவக்குமார் (23), அரியாண்டிபட்டியைச் சேர்ந்த ராசு மகன் பொன்னுச்சாமி (21), சுப்பராயபட்டியைச் சேர்ந்த அடைக்கலம்சாமி மகன் செந்தில்குமார் (24) ஆகிய 3 பேரிடமும், தான் சிறுமியுடன் பாலியல் ரீதியாக அத்துமீறியதை கூறியுள்ளான். இதையடுத்து இவர்கள் 3 பேரும் அந்த மாணவியிடம், 'நீ உனது காதலன் செல்வராஜுடன் உல்லாசம் அனுபவித்தது எங்களுக்குத் தெரியும்' என்று கூறி மிரட்டி, அவர்களும் அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பின்பு அதே அரியாண்டிபட்டியைச் சேர்ந்த பொன்னன் மகன் செல்வம் (28) மற்றும் பிச்சை மகன் சிவா(20) ஆகிய இருவரும் அந்தச் சிறுமியிடம், 'நீ மற்றவர்களிடம் உல்லாசமாக இருந்ததை நாங்கள் புகைப்படம் எடுத்து வைத்துள்ளோம். நீ எங்கள் இச்சைக்கு உடன்படாவிட்டால், அவற்றை முகநூலில் வெளியிட்டுவிடுவோம்' எனக்கூறி மிரட்டி அவர்களது ஆசைக்கும் இணங்குமாறு அழைத்ததாகக் கூறப்படுகிறது. இது பற்றி அந்த கிராமத்தினருக்குத் தெரியவர, மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமியின் தாயார் இதுகுறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சித்திரைச்செல்வி தீவிர விசாரணை நடத்தினார்.
இது தொடர்பாக அந்தச் சிறுமியின் காதலன் செல்வராஜ், அவருடைய நண்பர்களான சிவக்குமார், பொன்னுச்சாமி, செந்தில்குமார், செல்வம், சிவா ஆகிய 6 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் செல்வம் மற்றும் சிவாவை கைது செய்தனர். மற்ற 4 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். சிறுமியை சிவகங்கையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். பொதுவாகவே இந்தப் பகுதி பெண்களுக்கு பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இதனை, காமுகர்கள் பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிகிறது. எனவே, 'அரசாங்கமும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்தப் பகுதியில் பெண்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால், அவர்களுக்கு நலம் பயக்கும்' என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
-அப்துல்சலாம், திருப்பத்தூர்.
Comments