பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக முட்டை விலையில் தொடர் சரிவு!!
பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக முட்டை விலையில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளது. இரு தினங்களில் முட்டை விலையில் 35 காசுகள் சரிந்தது கோழிப்பண்ணையாளர்களை கவலையடைச் செய்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூரா சுண்டு பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோழிகள் இறந்த பண்ணையில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து கோழிப்பண்ணைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 1 கோடி முட்டை மற்றும் இறைச்சிக்கோழிகள் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் கேரள மாநிலம் சென்று பண்ணைகளுக்கு திரும்ப வரும் லாரி உள்ளிட்ட வாகனம் மூலம் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் நாமக்கல் பகுதியில் உள்ள பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே முட்டை விலையில் கடந்த இரு தினங்களாக சரிவு ஏற்பட்டு வருகிறது. இதன்படி கடந்த இரு தினங்களில் முட்டை விலை 35 காசுகள் குறைந்துள்ளது. 515 காசுகளாக இருந்த முட்டை விலை குறைந்து நேற்று முன்தினம் நிலவரப்படி 480 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக முட்டை விலையில் தொடர் சரிவு ஏற்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே இழப்பை சமாளிக்க முட்டைகளை குளிர்பதனக் கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கும் நடவடிக்கையில் பண்ணையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
-சுரேந்தர்.
Comments