வடசென்னை பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த 2 பேரை மீட்டு கவனிப்பு மையத்தில் சேர்த்த அமைச்சர்!!
வடசென்னை பகுதியில் மனநலம் பாதித்து சுற்றித்திரிந்த 2 பேரை மீட்டு கவனிப்பு மையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சேர்த்தார். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை: வடசென்னை பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீட்பு வாகனத்தில் வீதி, வீதியாக சென்றார். அந்த பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த 2 பேரை கண்டறிந்து, அவர்களை அதே வாகனத்தில் மீட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தில் சேர்த்து உணவு வழங்கி, தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
"மனநலம் குன்றி சாலையில் இருப்போரை கண்டறிந்து காப்பகங்களுக்கு கொண்டுவந்து பராமரிப்பதும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுமான இந்த திட்டம் தி.மு.க. மாநகராட்சி நிர்வாகத்தில் அங்கம் வகித்தபோது நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்விளைவாக அன்று சென்னையில் 1,830 பேர் பயனடைந்தார்கள். இப்படி கண்டறிபவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டபிறகு ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்டவர்கள் வடமாநிலங்களிலிருந்தும், வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் அவர்களது உறவினர்களால் அழைத்துச்செல்லப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது தேசிய நலவாழ்வு மையத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 1,021 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கான மருத்துச்சேவை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் 400-க்கும் மேற்பட்டவர்கள் சென்னையின் பல்வேறு தெருக்களில் சுற்றித்திரிவதாக வந்த தகவலின் அடிப்படையில் நானும், தேசிய நலவாழ்வு மைய குழு இயக்குனர் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் உருவான ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையம்’ என்கிற திட்டத்தை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்திருக்கிறார்கள்." இவ்வாறு அவர் கூறினார்.
-வேல்முருகன் சென்னை.
Comments