விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மண்டலத்தில் பஸ் போக்குவரத்து துவங்கியது.!!

    -MMH

     விழுப்புரம்-தமிழகத்தில் மாவட்டங்களுக்கிடையே போக்குரவத்து அனுமதிக்கப்பட்டதால், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மண்டலத்தில் 5 மாதங்களுக்கு பின், பஸ் போக்குவரத்து துவங்கியது. தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவால் பஸ், ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து, தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் பஸ்கள் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் மாவட்டங்களுக்கிடையே மற்றும் மாவட்டங்களுக்குள் பஸ்கள் இயக்கப்பட்டன.

நேற்று முதல் நாள் விழுப்புரம் மண்டலத்தில் உள்ள 244 டவுன் பஸ்களில் 195 பஸ்களும், 421 புறநகர் பஸ்களில் 227 பஸ்கள் என 70 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டன. அப்போது, டிரைவர், கண்டக்டர்களுக்கு தேவையான முகக் கவசம், கையுறை, சானிடைசர் போன்றவை வழங்கப்பட்டது. பஸ்களில் பயணிகள் பின்பக்கமாக ஏறி, முன்பக்கமாக இறங்கினர். பயணிகளுக்கு கிருமி நாசினி வைக்கப்பட்டது.விழுப்புரத்தில் இருந்து கடலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. நேரம் கணக்கிடாமல், பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்பட்டன.நீண்ட நாட்களுக்குப் பிறகு பஸ்கள் இயக்கப்பட்டதால், விழுப்புரத்தில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.இந்நிலையில், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படுகிறதா என கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, அனைத்து பஸ்களிலும், அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நாள்தோறும் பஸ்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும், 50 சதவீத பயணிகளுடன் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இயக்கப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்துக்கழக பொது மேலாளருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். எஸ்.பி., ஸ்ரீநாதா, போக்குவரத்துகழக பொதுமேலாளர் சேகர்ராஜ் உடனிருந்தனர்.புதுச்சேரி பணிமனையில் இயக்கவில்லைபுதுச்சேரியிலிருந்து திண்டிவனம் வழியாக சென்னை வரை இயக்கப்படும் பஸ்கள் முற்றிலும் இயக்காததால், பயணிகள் அவதியடைந்தனர். குறிப்பாக தமிழக அரசுக்கு சொந்தமான புதுச்சேரி பணிமனையில் இருந்து அரசு பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி கிடைக்காததால், புதுச்சேரியிலிருந்து திண்டிவனம், சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இதேபோல் திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி வரை குறைவான எண்ணிக்கையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் புதுச்சேரி பஸ் நிலையம் வரை செல்லாமல், கோரிமேடு எல்லையில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் புதுச்சேரி பஸ் நிலையம் வருவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சென்றனர்.

-சுரேந்தர்.

Comments