கவிஞர் யுகபாரதி சாட்டையடி கவிதை !!
கவிஞர் யுகபாரதி
கொஞ்சம் தேநீர் !!
கொஞ்சம் கவிதை !!
தொடர் -2
எளிமையான வார்த்தைகளை போட்டு நெஞ்சம் நெக்குருக செய்து விடும் மாயவித்தைக்காரர் கவிஞர் யுகபாரதி. பாட்டிலும் கவிதையிலும் உணர்வுகளை கைபிசைந்து கலந்து ஊட்டுபவர். சாவித்திரி பாட்டி - கவிதையில் மனதுக்குள் கால மாற்றங்கள் நிகழ்த்தும் அதிசயத்தையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார், கவிஞர் யுகபாரதி !!
காலம் ஒரு கண்ணாடி தானே !!
சாவித்திரி பாட்டி
சாவித்ரி பாட்டி
- கவிஞர் யுகபாரதி
பேச ஆள்கிடைக்காத
வயோதிகத்தில்
ஒரு காக்கையும்
சில பல்லிகளும் மட்டுமே
சாவித்ரி பாட்டிக்குக்
காதுகொடுத்தன.
ஆனபோதிலும் அதுகளிடம்
புருஷனின் அராஜத்தையோ
அத்துமீறிய குடிவெறியில்
ஓங்கி ஓங்கி அடித்ததையோ
சொல்லவே முடிந்ததில்லை
இரண்டு மருமகள்கள்
இருக்கும் வீட்டில்
தன்னைக் கொண்டவனும்
யோக்கியனே என்றுதான்
பேசிப் பொருமியது.
காலக் கொடுமை என்னவெனில்..
ஒரே ஒருமுறை
வாய்த்துடுக்கில் அந்தக்கிழவன்
தன் நடத்தயைச் சந்தேகித்து
துப்பிய வார்த்தையை
மறக்கவே முடியாமல்
எல்லா பெண் தெய்வத்திடமும்
ஒருவருக்கும் தெரியாதவாறு
அழுது அரற்றியதுதான்.
இன்னுமொன்று,
பேச ஆள்கிடைக்காத
இறுதிக்காலங்களில்
அதே சாவித்ரி பாட்டி
பேத்திகளின் காதல்கதைகளை
ஒட்டுக்கேட்பதை
வைத்துமிருந்தது வழக்கமாக.
நன்றி -கவிஞர் யுகபாரதி அவர்களுக்கு...
மீண்டும் ஒரு கோப்பை தேநீருடனும் கவிதையுடனும் சந்திப்போம் தோழர்களே..
-தொகுப்பு - ஊடகவியலாளன் ஆர்.கே.பூபதி.
Comments