திருப்பத்தூரில் ஊரடங்கின்போது சிக்கிய ஆடு திருடர்கள்!
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அண்ணா சிலை அருகே ஊரடங்கு சமயங்களில் வெளியில் சுற்றி திரிபவர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்தி நகர் போலீசார் நேற்று மாலை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிவகங்கை சாலையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரு இளைஞர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாகச் சென்றனர். இது குறித்து சந்தேகம் அடைந்த போலீசார், அந்த இருசக்கர வாகனத்தை துரத்திச் சென்று திருப்புத்தூர் பேருந்து நிலையம் அருகே மடக்கிப் பிடித்தனர். அப்பொழுது அவர்கள் கையில் வைத்திருந்த ஆடு குறித்து விசாரித்தபோது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த திருப்புத்தூர் போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் திருப்பத்தூரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சூர்யா மற்றும் மதகுபட்டி ராஜேந்திரன் நகர், செந்தில்குமார் மகன் பிரசாத் ஆகியோர் எனத் தெரிந்தது. இவர்கள் பாகனேரி பகுதியில் ஆடுகளைத் திருடி, திருப்பத்தூரில் விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரையும் திருப்புத்தூர் போலீசார் மதகுபட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
- அப்துல்சலாம், திருப்பத்தூர்.
Comments