கொரோனா பாதிப்பால் பாதியில் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்!

 

-MMH

     கொரோனா பாதிப்பால் பாதியில் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 9-ந்தேதி இந்தியாவில் தொடங்கி நடந்தது. இந்த போட்டியின் போது மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி 4 அணிகளை சேர்ந்த 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் வேறுவழியின்றி இந்த போட்டி கடந்த 4-ந் தேதி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் பிளே-ஆப் சுற்று, இறுதிப்போட்டி உள்பட 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. எஞ்சிய ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தி முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதேபோல் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த போட்டியை இந்தியாவில் நடத்துவது கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த போட்டிக்கான மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், இந்தியாவில் இந்த போட்டியை நடத்த வேண்டும் என்பதில் பி.சி.சி.ஐ. ஆர்வமாக இருக்கிறது. அதற்கு சற்று கால அவகாசம் எடுத்து முடிவு செய்யலாம் என்ற மனநிலையில் பி.சி.சி.ஐ.இருக்கிறது. 20 உலக கோப்பை போட்டி குறித்து நாளை மறுநாள் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் மேற்கண்ட இந்த 2 முக்கியமான போட்டிகளிலும் என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து ஆலோசிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி மூலம் நேற்று நடந்தது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு மத்தியில் வருங்கால போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதில் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் 2-வது முறையாக தொடர்ந்து ஐ.பி.எல். போட்டி அமீரகத்தில் அரங்கேற இருக்கிறது. கடந்த ஆண்டு (2020) இந்த போட்டி தொடர் முழுமையாக அமீரகத்தில் நடந்தது. எஞ்சிய ஐ.பி.எல். போட்டிக்கான தேதி எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்த போட்டி செப்டம்பர் 18-ந் தேதி முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இன்னும் 4½ மாதம் இருப்பதால் இந்த போட்டி குறித்து பொருத்தமான முடிவு எடுக்க போதிய காலஅவகாசம் வழங்குமாறு ஐ.சி.சி.யிடம் கேட்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ‘தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஐ.பி..எல். கிரிக்கெட்டில் மீதமுள்ள ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும். அந்த சமயத்தில் இந்தியாவில் மழைக்காலம் என்பதை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

-வேல்முருகன் சென்னை.

Comments