மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!!

      -MMH

மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானது, மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகராட்சி அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா(31).

கர்ப்பிணியாக இருந்தாலும் அவர் வழக்கம்போல் இந்த நெருக்கடியான கொரோனா தொற்று பரவிய காலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்குக் கடந்த 3 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சண்முகப்பிரியாவின் மரணம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சண்முகப்பிரியா அவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்களப்பணி வீரராக - அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரும்பணியாற்றிய இளம் மருத்துவரை இழந்திருப்பது ஆழ்ந்த வேதனை தருகிறது.

மருத்துவர்கள் மற்றும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் முன்களப்பணி வீரர்களாக நிற்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்திட அறிவுறுத்தி இருக்கிறேன். மருத்துவர் சண்முகப்பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னைக்கு அடுத்து மதுரையில் கரோனா தொற்று அதிகமாக உள்ளது. நகரில், தினமும் 600 முதல் 700 பேர் வரை இந்தத் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். 10 முதல் 17 பேர் வரை இறப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், தொற்று பாதிப்பும் இறப்பும் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மதுரையில் உச்சமாக 1,217 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 7 பேர் இறந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

- பாரூக், சிவகங்கை.

Comments