கோவையில் சிறுமிக்காக நின்ற முதல்வர் கார்..!!

-MMH

       கோவையில் மடிக்கணினி வாங்க சேமித்து வைத்திருந்த14,800 ரூபாய் பணத்தை முதலமைச்சர் ஸ்டாலினிடம், பள்ளி மாணவி நிவேதிதா முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்ட ஸ்டாலின், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அதில் கொரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்து கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.

இதன் பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் கார் மூலம் கோவை விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் நின்று இருந்த ஒரு சிறுமியின் அழைப்பை கண்டு வாகனத்தை நிறுத்த ஓட்டுநரிடம் கூறினார்.காரை ஓட்டுநர் நிறுத்தியதை அடுத்து அருகே சென்ற அந்த சிறுமி தன் பெயர் நிவேதிதா என்றும், தான் சேமித்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வந்ததாகவும் கூறினார்.

 இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் 14 ஆயிரத்து 800 ரூபாய்க்கான காசோலையை நிவேதிதா வழங்கினார். இதனைப் பெற்று கொண்ட முதலமைச்சர் அந்த சிறுமிக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். பின்னர் விமான நிலையத்திற்கு ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-I. அனஸ்.V. ஹரிகிருஷ்ணன்.

Comments