இரண்டு வகை கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் மக்கள் குழப்பம்.! முறைப்படுத்த முதலமைச்சரிடம் கோரிக்கை..!!
தற்போது தமிழகத்தில் இரண்டு வகையான கொரோனா தடுப்பு ஊசி போடப்படுகிறது. தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்த தடுப்பூசி மருந்துகளை 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கும், நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள தடுப்பூசி மருந்துகளையும் பயன்படுத்துகின்றனர்.
இதனால் தடுப்பூசி போட ஆர்வமுடன் வரும் மக்கள் இடையே குழப்பமும் சலசலப்பும் ஏற்படுகிறது. மேலும் தடுப்பூசி மையங்களில் இரண்டு தடுப்பூசிகளும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பலர் திருப்பி அனுப்பப் படுகின்றனர்.
மேலும் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்ய கோரி வருபவர்களை, தடுப்பூசி போடும் பணி இருப்பதால், பரிசோதனை செய்ய இயலாது எனக் கூறி திருப்பி அனுப்பபடுகின்றனர்.
தடுப்பூசி போடுவதற்காக வந்த மக்கள் தனிநபர் விலகலை கடைப்பிடிக்காமல் இருப்பதாலும், தேவையான எண்ணிக்கையில் ஊசி போடப்படாததாலும், தடுப்பூசி போடச் செல்பவர்களுக்கே தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.
தடுப்பூசி மையங்களில் போதுமான எண்ணிக்கையில் பணியாளர்களை நியமித்து, பணிகளை முறைப்படுத்த வேண்டும் எனவும் தமிழகத்தில் தடுப்பூசி மையங்களில் நிலவும் குழப்பங்களை சரி செய்ய வேண்டும் எனவும் நேற்று கோவை வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் பத்திரிக்கை நிருபர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மேலும் இப்பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும் எனவும் மாண்புமிகு முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் தெரிவித்தனர்..
நாளைய வரலாறு செய்திக்காக
-செய்தியாளர்கள்: குமார் ஊத்துக்குளி.ஈசா.
Comments